மாயமானும் மண் குதிரையும்: டிடிவி - ஓபிஎஸ் சந்திப்பு குறித்து இபிஎஸ்!

சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் பல்வேறு கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் துண்டினை வழங்கி கட்சியில் இணைத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘ ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் சேரும்போது பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை மாயமானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்து உள்ளது. பூஜ்ஜியம் + பூஜ்ஜியம் = 0 என்று தான் இருக்கும். ஒருவரை ஒருவர் துரோகி என்று குறிப்பிட்டார்கள். இரண்டு துரோகிகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியை உருவாக்குவதாக கூறியுள்ளனர்.

துரோகி என்றாலே எப்படி இருக்கும் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்‌. தினகரன் கூடாரம் காலியாகிவிட்டது. காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த நிலை தான் தற்பொழுது உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ’பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்குமே விசுவாசமாக இருந்ததில்லை. ஜெயலலிதா இருந்தபோது கட்சியிலிருந்து விலகி சென்றார். பின்னர் பாமகவில் போய் சேர்ந்தார். அந்த கட்சிக்கும் விசுவாசம் இல்லாமல் தேமுதிக கட்சிக்கு சென்றார். அங்கும் விசுவாசமாக இல்லாமல் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டியளிப்பது விந்தையாக உள்ளது. பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கு சென்றாலும் அந்த கட்சி முடிந்துவிடும். அப்படித்தான் இதுவரை நிலை. அவர் நிழல் கூட உடன் வரவில்லை.

அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்ததாகவும் இவரால் தான் அதிமுக இயங்கி வந்ததாகவும் மாயத் தோற்றத்தை உருவாக்கி பேட்டி அளிக்கிறார். ஒரு கிளைச் செயலாளர் உள்ள தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை என்று கூறினார்.

ஓ.பன்னீர் செல்வம் திமுகவிற்கு பி டீமாக செயல்படுகிறார் என்று கூறியிருந்தேன். அது நிரூபணம் ஆகிவிட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அணி விளையாடிய போது ஓ.பன்னீர் செலவம் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்துள்ளார். திமுகவை நிர்வகிப்பது சபரீசன் தான். என் மீது ஏற்கனவே ஆர்.எஸ்.பாரதி பொய்யான வழக்கு தொடர்ந்தார்.

டென்டரில் முறையீடு என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது வழக்கை திரும்ப பெற்றனர். இவர்கள் செய்த ஊழல்களை மறைப்பதற்காக எங்கள் மீது வழக்கு போட்டு வருகின்றனர். எந்தவித உண்மையும் இல்லை. அதிமுக ஆட்சி சிறப்பான ஆட்சி என்று நிரூபணம் செய்துள்ளோம் என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com