ம.ம.க. தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா
ம.ம.க. தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா

மாய பிம்பம் காட்டும் மைய பட்ஜெட்- ம.ம.க.

ஒன்றிய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையானது மாய பிம்பத்தைக் கட்டும் முயற்சியாக இருக்கிறது என்று பொருளாதாரப் பேராசிரியரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

” இந்தியா வளர்ச்சியின் பாதையில் பயணிப்பதாக மாயப் பிம்பத்தை கட்டும் முயற்சியின் இறுதி நிதிநிலை அறிக்கையாக இன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இடைக்கால நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது.

பத்திக்குப் பத்தி ஒன்றிய பாஜக தலைமையிலான அரசின் சாதனைகளென உண்மைக்குப் புறம்பான வார்த்தைகளால் அலங்கரித்து இருக்கிறார் நிதி அமைச்சா்.

2019 மீண்டும் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு, அடிப்படை ஆண்டை (Base year) மாற்றி, அத்துடன் இத்தனை ஆண்டுகளாக வளர்ச்சியை ஒப்பிடும் முறையைத் தனக்குச் சாதகமாக மாற்றி, அனைத்து நிதிநிலை உரையிலும் "இந்திய அரசு வளர்ச்சிப் பாதையில்" என்ற பொய்யான பிம்பத்தைக் கட்டும் முயற்சியின் இறுதி அத்தியாயம் இன்றைய நிதி நிலை அறிக்கை.

கல்விக்கும், மருத்துவத்திற்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. பட்டியலின. பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களுக்கான நிதி இந்த நிதி அறிக்கையில் குறைக்கப்பட்டுள்ளது.

பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீடு ரூ 9,409 கோடியிலிருந்து ரூ 6,780 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களுக்கான ஒதுக்கீடு ரூ 4295 கோடியிலிருந்து Rs 3,286 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை மக்களுக்கான நிதி ரூ 610 கோடியிலிருந்து தற்போது ரூ 555 கோடியாகக் குறைந்து உள்ளது.

வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு போன்ற அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க எந்தவொரு திட்டங்களையும் தீட்டாமல், காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்த மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை விமர்சித்த பாஜக, இன்று அதற்கு ரூ88,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற ஊரக வறிய மக்களுக்கு உதவிடும் திட்டத்தை 10 ஆண்டுகள் ஆட்சி செய்தும் பாஜகாவால் கொண்டு வர முடியாதது அவர்களது இயலாமையைக் காட்டுகிறது.

உட்கட்டமைப்பு, கிராம வளர்ச்சி, புதிய வறுமை ஒழிப்புத் திட்டங்கள் போன்ற எந்த ஒரு புதிய திட்டமும் இல்லாத வெற்று ஆவணம் இந்த வரவு செலவு அறிக்கை

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பை எதிர்நோக்கிய நாட்டு மக்களுக்கு, இந்த வரவு செலவு அறிக்கையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.” என்று ஜவாஹிருல்லா தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com