மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை

மாற்றுத்திறனாளி இருந்தால் மகளிர் தொகை மறுப்பு - பேச்சுக்கு அமைச்சர் அழைப்பு

மாற்றுத்திறனாளி உள்ள குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை இல்லை எனும் பிரச்னையில், சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஏழை எளிய குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான, விண்ணப்பப் பதிவு தொடக்கமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 24ஆம் தேதியன்று தனி நிகழ்ச்சியாக நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

இதேபோல, மாநிலம் முழுவதும் மொத்தம் 36 ஆயிரம் இடங்களில், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய, சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல இடங்களில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தில், யார் யாருக்கெல்லாம் உரிமைத் தொகை கிடைக்கும்? யார் யாருக்கெல்லாம் கிடைக்காது என்கிற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு அம்சமாக, மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை பெறக்கூடிய குடும்பங்களில், யாரும் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பால் மாநிலத்தில் உள்ள இலட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளிடையே அதிருப்தி ஏற்பட்டது. குடும்பத்தில் ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்க தடையாக இருக்கிறார்களே என கோபமும் வெறுப்பும் கூடுதலாக உண்டாகும் என்பதுதான், அவர்களின் வருத்தத்துக்கு காரணம்.

கர்நாடகத்தில்கூட இதேபோல கிருகலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படுகிறது; அதில் இப்படியொரு நிபந்தனையே இல்லை; தமிழ்நாட்டில் மட்டும் அரசு ஏன் இப்படி செய்யவேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

நாளைமறுநாள் 7ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் அறிவித்தது.

இந்த நிலையில், இதுகுறித்து பேச வருமாறு மாற்றுத்திறனாளி சங்கத்தினருக்கு சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநரகத்தில் நாளை காலை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com