இரா. முத்தரசன்
இரா. முத்தரசன்

மீனவர் பிரச்னையில் வெளியுறவுத் துறை தொடர்ந்து அலட்சியம்- முத்தரசன் சாடல்!

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையின் தாக்குதல், கைதுகளில் வெளியுறவுத் துறை அலட்சியமாக நடந்துகொள்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது. 

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமேஸ்வரம் பகுதியில் இருந்து நேற்று (04.02.2024) கடலில் மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்களை கைது செய்து, காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்றுள்ளது. மீனவர்களிடம் இருந்த இரண்டு படகுகளும், வலைகளும் கடற்படையினர் கைப்பற்றி சென்றுள்ளனர்.

இதே போல் நேற்று முன்தினம் (03.02.2024) வேதாரண்யம் பகுதி, ஆறுகாட்டுத்துறையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஐந்து மீனவர்களை கடற் கொள்கையர்கள் தாக்கி, அவர்களிடம் இருந்த இரண்டு ஜிபிஎஸ் கருவிகள், அலைபேசி கருவி, ஸ்மார்ட் கருவி பிடித்து வைத்திருந்த நண்டு மற்றும் மீன்களை அள்ளிச் சென்றுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார். 

மேலும், ”இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையும், கடற் கொள்ளையர்களும் தாக்குவதும், கைது செய்து அழைத்துச் செல்வதும், அவர்களிடம் இருந்து பறித்துச் செல்லும் படகுகள், வலைகள், உள்ளிட்ட வாழ்வாதாரக் கருவிகள் அனைத்தையும் சேதப்படுத்துவதும் நாள் தோறும் நடக்கும் நிகழ்வாகி விட்டது. இலங்கை கடற்படை, கடல் கொள்ளையர்களின் தொடர் அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர் சமுதாயத்தில் கடும் கொந்தளிப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும், அச்சமின்றி மீன்பிடி தொழில் நடைபெறவும் ஒன்றிய அரசு அரசியல் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரும்பத் திரும்ப வலியுறுத்துப்படுகிறது. மீனவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாது தமிழ்நாடு முதலமைச்சரும் திரும்பத் திரும்ப பிரதமர் மோடி அவர்களுக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதி வருகின்றனர். ஆனால் இவை அனைத்தும் “செவிடன் காதில் ஊதும் சங்கு போல்“ பயனற்று போவதும் மீனவர்கள் தினந்தோறும் தாக்கப்படுவது, கொல்லப்படுவது என்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மீனவர் நலன் பாதுகாக்க அரசியல் உறுதியுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய ஒன்றிய அரசும், அயலுறவுத்துறையும் அலட்சியம் காட்டி வருகிறது.” என்றும்,

“இதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வரவும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள், வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை மீட்டுத் தரவும் இலங்கை அரசுடன் ராஜியரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் முத்தரசன் தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com