தமிழகம் முழுக்க பல்வேறு வகையான காய்ச்சல் பரவிவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் முழுவதும் பல்வேறு அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், ஓரிரு நாள்களாக சற்று வாட்டத்துடன் காணப்பட்டார்.
நேற்று காலையில் 10.30 மணிக்கு தலைமைச்செயலகத்திலிருந்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளை முதலமைச்சர் திறந்துவைப்பதாக இருந்தது. அதைப்போல 12 மணிக்கு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு உயிரிய ஊக்கத்தொகை வழங்கு முதலமைச்சர் பாராட்டுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இரு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்ள வில்லை. பாரா போட்டியில் வென்றவர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஊக்கத்தொகை வழங்கினார்.
நேற்று அவரின் கொளத்தூர் தொகுதியில் அமைச்சர்கள் சேகர்பாபு, தங்கம்தென்னரசு ஆகியோரும் மேயர் பிரியாவும் மழைக்காலத் தேவை பணிகளை முடுக்கிவிட்டனர். முந்தைய நாள் அமைச்சர் சேகர்பாபு சில பணிகளை முடுக்கிவிட்டார்.
இந்த நிலையில், சென்னை, இராஜா அண்ணமலைபுரத்தில் உள்ள மெட்ராஸ் இ.என்.டி. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மோகன் காமேசுவரன் இன்று பிற்பகல் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றுமுதல் இருமல், காய்ச்சலால் அவதிப்படுகிறார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாள்கள் முதலமைச்சரை ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.