முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

முதலீட்டாளர் மாநாடு - முதலமைச்சர் நம்பிக்கை!

தமிழக அரசின் சார்பில் நாளை தொடங்கவுள்ள உலக முதலீட்டாளர் மாநாடு மாநிலத்தின் தொழில் திறத்தைக் காட்டுவதாக அமையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தன் சமூகஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள செய்தி:

”உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இன்னும் ஒரு நாளில் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு மிகவும் கூடியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நமது Titans Of TamilNadu (தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்கள்) மற்றும் One Trillion Dreams (ஒரு ட்ரில்லியன் கனவுகள்) ஆகிய பரப்புரைகள் பரவலான ஆர்வத்தை மூட்டியுள்ளன. 450க்கும் மேற்பட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள், 170 உலகப்புகழ் பெற்ற பேச்சாளர்கள், 50 உலகநாடுகளின் பங்கேற்பு என உலக முதலீட்டாளர் மாநாடு தமிழ்நாட்டின் தொழில் திறத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமையும்.

               தலைமைப்பண்பு குறித்த 26 அமர்வுகள், குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான காட்சியரங்குகள், தமிழ்நாட்டின் தொழிற்சூழலுக்கான காட்சியரங்குகள், பல்வேறு உலக நாடுகளுக்கான காட்சியரங்குகள், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு காட்சியரங்குகள் என எங்கள் மாநிலத்தின் விந்தையைக் காணவும்; தொழில் கூட்டிணைவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பங்கேற்பாளர்களுக்கு அற்புதமான வாய்ப்பினை இம்மாநாடு வழங்கும்.

               தமிழ்நாட்டின் தொழில் மரபைக் கொண்டாடி இம்மாநிலம் வழங்கும் எல்லையற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள எங்களோடு இணையுங்கள்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com