நெல்லையில் தன் உண்டியல் சேமிப்பை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நிவாரணத்துக்காக வழங்கிய 2ஆம் வகுப்பு மாணவி சேவிதா பகவதி!
நெல்லையில் தன் உண்டியல் சேமிப்பை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நிவாரணத்துக்காக வழங்கிய 2ஆம் வகுப்பு மாணவி சேவிதா பகவதி!

உண்டியல் சேமிப்பை நிவாரணத்துக்கு வழங்கிய ஆட்டோ ஓட்டுநரின் குழந்தை!

அதிகனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் மீட்பு,நிவாரணப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்கூறி, முகாம்களில் தங்கியுள்ள சுமார் 1000 நபர்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை, போர்வை, பாய், பிஸ்கட் மற்றும் ரொட்டி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை வழங்கினார்.

அப்போது, ஆட்டோ ஓட்டுநர் பாலசுப்பிரமணியம் என்பவரின் இரண்டாம் வகுப்பு பயிலும் மகள் சேவிதா பகவதி தனது உண்டியல் சேமிப்புப் பணத்தை நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரிடம் வழங்கினார். அவர் அச்சிறுமியைப்  பாராட்டி வாழ்த்தினார்.

திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க பெறப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களின் விவரங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்த வர்த்தக மையத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இதுநாள் வரை பெறப்பட்ட நிவாரணப் பொருட்களான 14,010 கிலோ அரிசி, 3195 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, 6050 லிட்டர் பால், 4590 கிலோ பால் பவுடர், 5761 பிஸ்கட்/ரொட்டி/ரஸ்க், 5136 லிட்டர் சமையல் எண்ணெய், 43,416 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 93,666 இதர அத்தியாவசியப் பொருட்களான தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, கொசுவத்தி சுருள், போர்வை, பாய், துண்டு மற்றும் நாப்கின் போன்ற நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, இவற்றில் 91 சதவிகித பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று அலுவலர்கள் அவரிடம் தெரிவித்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com