முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்
தமிழ்நாட்டை 2030-31ம் நிதிஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக உயர்த்த தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையொட்டி, தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
இதன்படி, சென்னையிலிருந்து இன்று காலை 11.25 மணிக்கு புறப்படும் முதலமைச்சர், முதலாவதாக சிங்கப்பூர் செல்கிறார். அங்கு அந்நாட்டு போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் சண்முகம் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப், கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் ஆகியவற்றின் உரிமையாளர்களை சந்தித்துப் பேசுகிறார்.
அங்கு நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டின்போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், ஃபேம்டிஎன் (FameTN), டான்சிம்(TANSIM), தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கும், சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக் கழகம்(SUTD - Singapore University of Technology and Design), சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு, சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு (Singapore Indian Chamber of Commerce and Industry)ஆகியவற்றுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து, வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஜப்பான் நாட்டில் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு முன்னணி தொழில் துறைத் தலைவர்கள், அரசு அதிகாரிகளையும் சந்தித்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க உள்ளார். அங்கு நடைபெறும் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
முதல்முறையாக ஒசாகா நகருக்கு முதலமைச்சர் தலைமையிலான குழு செல்ல உள்ளது. ஜெட்ரா நிறுவனத்துடன் இணைந்து முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் கலந்துகொள்கிறார். முக்கிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். ஒசாகா வாழ் இந்திய சமூகத்தினர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார்.தலைநகர் டோக்கியோவில் தொழில் துறை அமைச்சர் நிஷுமுரா யசுதோஷி, ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நொரிஹிகோ ஆகியோரை சந்திக்கிறார்.
200-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்று, கியோகுடோ, ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன. அங்குள்ள மேம்பட்ட தொழில் மையத்தையும் முதலமைச்சர் பார்வையிடுகிறார். முதலமைச்சருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் உயர்அதிகாரிகளும் செல்கின்றனர். இரு நாட்டு பயணத்தை முடித்துவிட்டு வரும் 31-ம் தேதி முதலமைச்சர் தமிழ்நாடு திரும்புகிறார்.