’முதியோர், மாற்றுத்திறனாளிகள்... - ஆந்திர வழியில் செல்லுமா தமிழக அரசு?’

’முதியோர், மாற்றுத்திறனாளிகள்... - ஆந்திர வழியில் செல்லுமா தமிழக அரசு?’

முதியோர், கைம்பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ஆந்திர மாநில அரசின் வழியை தமிழக அரசும் பின்பற்றுமா என பா.ம.க. தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில்  முதியோர், கைம்பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான  மாத ஓய்வூதியம்  ரூ.3,000 ஆக உயர்த்தபட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கையும்   66.34 லட்சமாக  உயர்த்தப்பட்டிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை  ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி  இன்று  தொடங்கி வைத்திருக்கிறார். ”ஆந்திர மாநில மக்களுக்கு சமூக நீதியும், சமூகப் பாதுகாப்பும் வழங்குவதில்  இந்தத் திட்டம் மிகப்பெரிய மைல்கல்.” எனக் குறிப்பிட்டுள்ள அன்புமணி, 

”ஆந்திர மாநிலத்தில் முந்தைய தெலுங்கு தேசம்  ஆட்சியின் போது  பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம்  வெறும் ரூ.1000 மட்டுமே. பயனாளிகளின் எண்ணிக்கையும்  39 லட்சமாக மட்டுமே  இருந்தது. கடந்த ஐந்தாண்டுகளில்  மாத ஓய்வூதியம் 3 மடங்கு அளவுக்கும்,  பயனாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.  ஓய்வூதியத் திட்டத்திற்காக செலவிடப்படும் தொகை ஆண்டுக்கு ரூ.4800 கோடியிலிருந்து ரூ.23,000 கோடியாக, அதாவது நான்கரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.  சமூகப் பாதுகாப்பு வழங்குவதில் இது மிகச்சிறந்த நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.” என்று பாராட்டுதெரிவித்துள்ளார். 

”ஆனால், தமிழ்நாட்டில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் எந்த அளவில் செயல்படுத்தப்படுகிறது  என்பதை அறிந்தால்  ஏமாற்றமும், வருத்தமும் மட்டுமே விஞ்சும். தமிழ்நாட்டில் முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு  கடந்த பல ஆண்டுகளாக மாதம் ரூ.1000 மட்டுமே  ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், கடந்த ஜுலை மாதத்தில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வுதியம் ரூ.1500 ஆகவும்,  மற்ற பிரிவினருக்கான ஓய்வூதியம் ரூ.1200 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆந்திர அரசுடன் ஒப்பிடும் போது இது மிக மிக குறைவு ஆகும்.

மற்றொருபுறம் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவாகும். ஆந்திரத்தில் மொத்தம் 66.34 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது அம்மாநிலத்தில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கையான 96 லட்சத்தில் மூன்றில்  இரு பங்காகும்.  ஆனால், தமிழ்நாட்டில் 2.11 கோடி குடும்பங்களில் ஏழில் ஒருவர் என்ற கணக்கில் 30.55 லட்சம் பேருக்கு மட்டுமே  ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இரு ஆண்டுகளூக்கு முன் இந்த எண்ணிக்கை 34.52 லட்சத்திலிருந்து 2 லட்சம் குறைந்து விட்டது. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் கோரி 74 லட்சம் பேர் விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கும் ஓய்வூதியம்  வழங்க  நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது மக்களுக்கு சமூகநீதியும், சமூகப் பாதுகாப்பும் வழங்குவதற்கான அறிகுறி அல்ல.

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்திற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.5500 கோடி மட்டுமே செலவிடப்படும் நிலையில், ஆந்திரத்தில் நான்கு மடங்கு அதிகமாக ரூ.23,556 கோடி செலவிடப்படுகிறது.

ஆந்திரத்தில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையில்  66 விழுக்காட்டினருக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் குறைந்தது 1.35 கோடி பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம்  ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்துக் காத்திருக்கும்  75 லட்சம் பேருக்கும் ஓய்வூதியம் வழங்கி, பயனாளிகளின் எண்ணிக்கையை  1.05 கோடியாக உயர்த்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தின் அளவை மாதம் ரூ.5 ஆயிரமாகவும்,  மற்ற பிரிவினருக்கான ஓய்வூதியத்தை  மாதம் ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்த  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள்  உள்ளிட்டோரின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்து சமூக நீதி வழங்க வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com