ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து விடுவிக்கப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதி அளிக்கும்படி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
நளினி உள்பட ராஜிவ் வழக்கில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்த ஏழு பேரையும் விடுவிக்க 2022 நவம்பரில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்படி விடுவிக்கப்பட்ட அவர்களில் இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன் இருவரும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
சாந்தன் தன்னை இலங்கைக்கும், முருகன் தன்னை இங்கிலாந்துக்கும் அனுப்ப அனுமதி அளிக்க உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
மனுக்களை விசாரித்த கிருஷ்ணகுமார், தனபால் ஆகியோர், மைய, மாநில அரசுகள் இரண்டு வாரங்களில் இதற்கு பதில் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டனர்.
இதனிடையே, பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்காக முருகனை திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னை இலங்கைத் தூதரகத்துக்குச் சென்றுவர அனுமதி கேட்டு அவரின் மனைவி நளினி வேறு ஒரு முறையீடு செய்திருந்தார். வரும் 30ஆம் தேதிக்குள் அதற்கு பதில் அளிக்கும்படியும் மைய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.