கர்நாடக சட்டப் பேரவையில் அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா இன்று நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்து பேசும் போது, “காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேகதாது அணையைக் கட்ட ஒரு தனி மண்டலக் குழு, இரண்டு துணை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ :
”கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானதாகும்.
காவிரியில் நீரைத் தடுத்து, 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 67.14 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட மேகேதாட்டு அணையைக் கட்டவும், 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதை அனுமதித்தால் தமிழகத்தின் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும்.
கடந்த 48 ஆண்டுகளில் 15.87 லட்சம் ஹெட்டேர் நிலம் சாகுபடி பரப்பை நாம் இழந்துள்ளோம். ஆனால் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 38.25 இலட்சம் ஹெக்டேராக அதிகரித்துவிட்டது.
தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கர்நாடகா, மீண்டும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந்திருப்பதும், திட்டத்தைச் செயற்படுத்த குழுக்கள் அமைத்துள்ளதாக முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டு இருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
கர்நாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.”
கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும்!
பா.ம.க. நிறுவனர் இராமதாசு:
”உச்சநீதிமன்றத் தடையை மீறி காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கவும், அதனடிப்படையில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கவும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
ஆனால், இதை சற்றும் மதிக்காமல், மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யும் பொறுப்பை மத்திய நீர்வள ஆணையத்திடம் காவிரி மேலாண்மை ஆணையம் அண்மையில் வழங்கியது. அதற்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து விட்டதாக கர்நாடகம் அறிவித்திருக்கிறது. இதற்குப் பிறகும் கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழக அரசும், மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே 1924&ஆம் ஆண்டில் கையெழுத்தான காவிரி நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அம்மாநில அரசு அணைகளை கட்ட முடியாது. காவிரி சிக்கல் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகளை கட்ட முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு துடிப்பதும், அதற்கு மத்திய நீர்வள அமைப்புகள் துணை போவதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானவை.
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழி மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்வது தான். அதை மத்திய அரசு உடனடியாக செய்வதுடன், மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கருநாடகத்தை எச்சரிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேகதாது விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகத்தைக் கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.”