சிபிஐ எம் கட்சியின் மாநிலக் குழுவில் சீதாராம் யெச்சூரி
சிபிஐ எம் கட்சியின் மாநிலக் குழுவில் சீதாராம் யெச்சூரி

தமிழ்நாடு பருத்திக் கழகம் என்ன ஆச்சு?- சி.பி.எம். கேள்வி!

மேற்கு மாவட்டங்களில் தொழில்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ள நிலைமையை சீராக்க சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலக் குழுக் கூட்டம் கோயம்புத்தூரில், கடந்த இரண்டு நாள்களாக மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ.சண்முகம் உட்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், மேற்கு மாவட்டங்களின் தொழில் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்டவைகளில் கணிசமான சிறு / குறுந்தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, துணி உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடை சார்ந்த தொழில்களும், வார்ப்பட தொழில்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

ஒன்றிய அரசின் மோசமான கொள்கைகளால் இந்தப் பகுதி கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இப்பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

உள்நாட்டு நூல் உற்பத்தியாளர்களை பாதிக்கும் விதத்தில் குறிப்பாக, பஞ்சு ஏற்றுமதியின்போது உள்நாட்டு தேவையை கணக்கில் கொள்ளாமல் பெரும் கார்ப்ரேட் முதலாளிகளின் லாபத்தை மட்டுமே முதன்மையாக கொள்ளும் பன்னாட்டு நூல் இறக்குமதிக்கு கொடுத்துள்ள அனுமதியை விலக்கிக் கொள்ள வேண்டும். கழிவுப் பஞ்சை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்திட வழிவகுக்க வேண்டும். மேலும், ஏற்றுமதி தொழில்கள் மந்தமாகியிருப்பதால் டிராபேக் சதவீதத்தை உயர்த்திட வேண்டும். இப்பகுதியில் செயல்படும் தொழில்களுக்கு வங்கிக் கடன்களில் ஒன்றிய பாஜக அரசு நிவாரண திட்டம் அறிவிக்க வேண்டும்.

ஒன்றிய ஆட்சியின் போக்கிற்கு மாற்றாக ‘தமிழ்நாடு பருத்திக் கழகம்' உருவாக்குவோம் என்ற முக்கியமான அறிவிப்பை தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொண்டது. அதனை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்து  நிவாரணமளிக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் நிர்பந்தம் காரணமாக தமிழ்நாட்டில் சிறு / குறு தொழில்களுக்கு மின் கட்டணத்தில் செய்துள்ள மாற்றங்கள் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து இந்த சுமை ஓரளவு குறைக்கப்பட்டிருந்தாலும், சிறு / குறு தொழில் நிறுவனங்களுக்கு நிலை கட்டணம், பீக் ஹவர்  கட்டண உயர்வை ரத்து செய்திடுவதும்,  மேலும் சிறு குறு தொழில்களை பாதுகாக்கும் வகையில்  முற்றாக நிவாரணம் அளிப்பதுடன் சூரிய மின்சாரம் உட்பட்ட மாற்று முறைகளைக் கையாள மாநில அரசு மானியம், கடன் உதவிகள் வழங்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும், ஈரோடு மாவட்டத்தில் பட்டியலின அருந்ததிய இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும் என்றும் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதில், “ ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுக்கா பொலவக்காளிபாளையம், இந்திரா நகரை சேர்ந்த பட்டியலின அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நவீன்குமார், கிருபாகரன் மீது 21.11.2023 அன்று சாதி ஆதிக்க மனப்பான்மையுடன் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்கொடுமை செயலை செய்த 20 நபர்கள் மீது 24.11.2023 அன்று வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டும், இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

சாதி ஆதிக்க சக்திகள் இச்சம்பவத்தை திசைதிருப்பும் வகையிலும் தாங்கள் செய்த குற்றச் செயலை மறைத்திட கொலைவெறி தாக்குதலுக்குள்ளான இரண்டு இளைஞர்கள் மீது திருட்டு குற்றம் சாட்டி, காவல்துறையும் பாதிக்கப்பட்ட இரு இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டனத்திற்குரியது.

தாக்குதலில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வன்கொடுமை குற்றவாளிகள் 20 பேர் மீதான வழக்கினை ரத்து செய்திட வேண்டும் என சாதீயரீதியாக அணிதிரண்டு மறியல் நடத்திய சம்பவம் அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும் தந்திரமேயாகும்.

சாதி ஆதிக்க மனப்பான்மையுடன் கொலைவெறி செயலில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்துள்ள அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என்று மாநிலக்குழு வற்புறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு, பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், காயம் அடைந்த இளைஞர்களுக்கு மருத்துவ உதவிகளும், உரிய இழப்பீடும் வழங்கிட தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

சி.பி.ஐ.எம். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com