தி.க. தலைவர் கி.வீரமணி
தி.க. தலைவர் கி.வீரமணி

மைய அரசின் 90 செயலாளர்களில் ஓ.பி.சி. 3 பேர்தானே?- பிரதமருக்கு வீரமணி கேள்வி!

”ஒன்றிய அரசின் 90 செயலாளர்களில் மூன்றே மூன்று பேர்தானே ஓ.பி.சி. சமூத்தவர்” என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பிரதமர் மோடியைக் கேட்டுள்ளார். 

தெலங்கானா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கடந்த 7ஆம் தேதி ஐதராபாத்தில் பேசிய பிரதமர் மோடி, “சமூகநீதிக் கோட்பாட்டில் பா.ஜ.க.வுக்கு மிகவும் உறுதியான ஈடுபாடு உள்ளது. அதனால்தான் எனது அரசு (ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.) தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்களுடன் - பட்டியல் சமூகத்தாருக்கும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் எதிலும் முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வருகிறது” என்று கூறியிருந்தார்.

அவரின் இந்தப் பேச்சு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வீரமணி,

““பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சுயமரியாதைக் கூட்டம்“ என்ற பெயரில் கூட்டம் பேசியிருக்கிறார். (“Self Respect to BC’s”) என்பதாகும். இதற்கான வாதமாக அவர் கூறுகிறார்: அவரது ஒன்றிய அமைச்சரவையில் 27 சதவிகித ஓ.பி.சி. (OBC) அமைச்சர்கள், உள்ளனராம். 2014இல் பிரதமர் பதவிக்கு அவர் வந்தபோது எத்தனை சதவிகிதம் இவர்கள் இருந்தனர் என்ற கேள்விக்கு அவரால் விடையளிக்க முடியாத இக்கட்டு நிலையே ஏற்படும்.

எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களைப் பற்றி கூறியிருக்கும்போது, நமது பிரதமர் அவர்களை நோக்கி சில சந்தேகங்களை வைக்க ஒடுக்கப்பட்ட மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டின் அளவுகோலில் பொருளாதாரம் உண்டா?

இந்திய அரசமைப்புச் சட்டம் 15(4)இன்படி OBC என்ற பிற்படுத்தப்பட்டவர்களை அடை யாளப்படுத்தல் சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் (“Sociallly and Educationally”) என்பதுதானே - அதை மாற்றி, முந்தைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் 9 பேரைக் கொண்ட இந்திரா சஹானி வழக்கில் பொருளாதார அடிப்படை இடஒதுக்கீடு (முன்பு) 10% சதவிகிதம் செல்லாது என்பதை தலைகீழாக்கி அவசர அவசரமாக 103ஆவது அரசமைப்புச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து 4 நாட்களில் சரியான விவாதமே நாடாளுமன்றத்தில் நடத்தாமல், நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று சட்டமாக்கி, 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மேலே 10 சதவிகித இடஒதுக்கீடு - அதுவும் உயர் ஜாதி ஏழைகளுக்கு மட்டுமே; எல்லா ஜாதி ஏழைகளும் இதன் கீழ் வர மாட்டார்கள் என்று அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தையே தகர்த்தெறிந்தீர்களே, மாநிலங்களின் ஒப்புதல்களைப் பெற்று நிறைவேற்றாது ‘தானடித்த மூப்பாக’வேத்தானே நடத்தினர்.

உயர்ஜாதியினரில் சமூக கல்வி ரீதியாக பின் தங்கியோர் உண்டா? உயர் ஜாதி ஏழைகள் - கல்வியிலும், சமூக ரீதியாகவும், பிற்படுத்தப்பட்டவர்களா? புள்ளி விவரக் கணக்கு ஏதேனும் நடத்தப்பட்டதா?

ஒன்றிய அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகிதம் என்று இப்போது தேர்தல் பிரச்சார சங்கீதம் பாடுகிறாரே - அந்தப்படி அவர்கள் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் 100க்கு 100 சதவிகிதம் உயர்ந்தவர்கள், தேவையற்ற அஜீரணக்காரர்கள் - பசியேப்பக்காரர்கள் அல்ல என்ற உண்மையை இவர் மறுக்க முடியுமா?

90 ஒன்றிய அரசு இலாக்காக்களில் செயலாளர்களில் வெறும் 3 பேர் தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இளந் தலைவர் ராகுல் காந்தி விடுத்த கேள்விக்கணைக்கு அவர் பதில் அளிப்பாரா? இவரது அரசு எத்தனை எஸ்.சி., எஸ்.டி., உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை இந்த 9 ஆண்டு ஆட்சியில் நியமனம் செய்துள்ளது?

மத்திய பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களோ, பேராசிரியர்களோ எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இவர்களில் இவரது ஆட்சியில் நியமனம் பெற்றோர் புள்ளி விவரங்களைப் பார்த்தால் ஒடுக்கப்பட்டோர் உரிமை காற்றில் பறந்திருக்கும் நிலை தெளிவாகுமே! சமூகநீதி என்றால் இதுவா? ” என்று கி. வீரமணி கேட்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com