ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக அங்கீகரிக்கக்கூடாது: சி.வி.சண்முகம் மனு!
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக அங்கீகரிக்கக்கூடாது என மக்களவை சபாநாயகரிடம் அதிமுக சார்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டதால், கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரகளுடன் சேர்த்து, அவரது மகனும் தேனி தொகுதி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத்தும் நீக்கப்பட்டார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத் எம்பியை அதிமுக உறுப்பினராக கருதக்கூடாது என மக்களவை சபாநாயகரிடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டது. எனினும், நீதிமன்ற வழக்குகளால் அந்த மனு மீது நடவடிக்கை ஏதும் இன்றி நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவை வழங்கினார். அதில், ரவீந்திரநாத்தை அதிமுக உறுப்பினராக அங்கீகரிக்கக் கூடாது என மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் உறுதி அளித்தார் என சி.வி.சண்முகம் கூறினார். இந்த மனுவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால், நாடாளுமன்ற மக்களவையில் அதிமுக சார்பில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலை ஏற்படும்.