வருகையைத் தவிர வேறு எதையும் பதிய முடியாது - ஆசிரியர்கள் எதிர்ப்பு!
பள்ளிக் கல்வித் துறையில் சில ஆண்டுகளாக மாணவர் வருகை முதல் பல தகவல்களையும் எமிஸ் எனும் தளத்தில் பதிவுசெய்து வருகின்றனர். கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பு என்ற எமிஸ் செயலியின் மூலம் பள்ளிக்கல்வியின் அனைத்து தரவுகளையும் ஒருங்கிணைப்பதில் அரசு முனைப்பு காட்டிவருகிறது. ஆனால், அடுத்தடுத்த பதிவேற்றப் பணிகளால் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாகவும் கூடுதல் வேலைப் பளு ஏற்படுவதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தொடக்கக் கல்வி இயக்குனருக்கு இதுகுறித்து முக்கிய கடிதம் அனுப்ப்பப்பட்டுள்ளது.
அதில், ” எண்ணும் எழுத்தும் திட்டம் ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் கல்வித் தரத்தினை பாதிக்கிறது. எனவே அதை முழுமையாகக் கைவிட வேண்டும். இத்திட்டத்தில் செல்போன் செயலி மூலம் தேர்வு நடத்துவதையும், அதன் மூலம் மாணவர்களின் வளரறி மதிப்பீட்டுப் பணிகளை பதிவேற்றம் செய்யச் சொல்வதையும் கைவிடவேண்டும்.
மேலும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாக வும், மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடியதுமான எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ஆன்லைன் பதிவேற்றப் பணிகளில் இருந்தும், எமிஸ், டி.என்.எஸ்.இ.டி. விண்ணப்பம் போன்ற பணிகளில் இருந்தும் வரும் 15ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக விடுவித்துக் கொள்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் வருகை மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவேற்றம் தவிர மற்ற எந்த விவரங்களையும் செல்போன் மூலம் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யமாட்டார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.