விஜயலட்சுமியிடம் மருத்துவ சோதனை, வாக்குமூலம்... - சீமான் விவகாரத்தில் திருப்பமா?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சேர்ந்துவாழ்ந்ததாகக் கூறும் நடிகை விஜயலட்சுமியிடம் நேற்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. சீமான் மீதான அவரின் குற்றச்சாட்டு விவகாரத்தில் இது முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டில் சீமான் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் அளித்தார். அந்த விவகாரத்தில் அப்போது இரு தரப்பும் சமரசமாகப் போய்விட்டனர் என்று கூறப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் தன் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி விஜயலட்சுமி கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை காவல் ஆணையரகத்தில் மீண்டும் புகார் அளித்தார். அதன்படி கடந்த 31ஆம் தேதி ராமாபுரம் காவல்நிலையத்தில் அவரிடம் துணை ஆணையர் உமையாள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
பிறகு, செப்டம்பர் முதல் தேதியன்று திருவள்ளூர் மாவட்ட மகளிர் கூடுதல் நீதிமன்றத்தில் விஜயலட்சுமி நிறுத்தப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரை திருக்கழுக்குன்றத்திலிருந்து இதற்காக தனி பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துவந்து சென்றுவிட்டனர்.
விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக, அடுத்தடுத்து முறைப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, சீமான் மீதான புகாரில் கைது போன்ற நடவடிக்கை இருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.