திருவண்ணாமலை, மேல்மா கூட்டுச்சாலையில் போலீஸ் குவிப்பு
திருவண்ணாமலை, மேல்மா கூட்டுச்சாலையில் போலீஸ் குவிப்பு

விவசாயிகள் மீது குண்டர் சட்டம்- அ.தி.மு.க.வும் கண்டனம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கள் நிலத்தை அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிவரும் விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டதை அ.தி.மு.க.வும் கண்டித்துள்ளது. 

பா.ஜ.க., பா.ம.க. உட்பட பல கட்சிகளும் ஏற்கெனவே தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கும் நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமியும் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“ திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதி அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல் மா, தேத்துறை, குரும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கள், அத்தி, வட ஆளப்பிறந்தான், இளநீர் குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த 3,300 ஏக்கர் பரப்பு கொண்ட விவசாய விலை நிலங்களை சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கம் என்ற பெயரில் கையகப்படுத்துவதற்காக திமுக அரசு அரசாணையை பிறப்பித்திருக்கிறது. இதை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் சில மாதங்களாக அறப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்தக் கோரிக்கைகளை ஆதரித்து கடந்த மாதம் நான்காம் தேதி அதிமுக சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பங்கெடுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தைக் குறைக்கவும் அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கவும் அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் மீதும் விவசாயிகள் மீதும் திமுக அரசு தொடர் வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வழக்குகளைக் காரணம் காட்டி எந்த விதமான முன் வழக்குகளும் இல்லாத விவசாயிகள் மீது-  பொது அமைதிக்கு அவர்கள் குந்தகம் விளைவித்தார்கள் என காரணத்தைக் காட்டி ஏழு விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு காவலை இந்த அரசு போட்டு இருக்கிறது.

மேல்மா கூட்டுச்சாலை கூழமண்டல் போன்ற பகுதிகள் போர்க்களம் போல காட்சி அளிக்கின்றன. இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போட்டிருக்கக்கூடிய முள்வேலிகளைப் போல அங்கே முள்வேலிகளை தடுப்புகளை அமைத்து பெரும் கலவரத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனங்களை எல்லாம் கொண்டுநிறுத்தி விவசாயிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இந்த அரசு முயல்கிறது. விவசாயிகளின் போராட்டத்தை போராட்டத்திற்கு காரணம் கண்டறிந்து அதை தீர்த்துவைப்பதற்கு முடியாத திமுக அரசு காவல்துறையை ஏவி கனகச்சிதமாக செயல்பட்டுக்கொண்டுவருகிறது. விவசாயிகள் ஏழு பேர் மீதான குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக அதிமுக பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தும்.” என்று பழனிசாமி கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com