வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரனுடன் டிஆர்பாலு, நவாஸ் கனி, மீனவர் பிரதிநிதிகள்
வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரனுடன் டிஆர்பாலு, நவாஸ் கனி, மீனவர் பிரதிநிதிகள்

வெளியுறவு இணை அமைச்சரிடம் தமிழக மீனவர் பிரதிநிதிகள், எம்.பி.கள் முறையீடு!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரனிடம் மீனவர் பிரதிநிதிகளும் தி.மு.க. மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் இன்று காலையில் நேரில் முறையிட்டனர். அப்போது, இப்பிரச்னை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் அவர்கள் அளித்தனர்.

டி.ஆர்.பாலுவுடன், இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் கே. நவாஸ் கனி, இராமநாதபுரம் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் என்.ஜே. போஸ், பி. சேசுராஜா, ஆர். சகாயம் ஆகியோரும் சந்திப்பில் உடனிருந்தனர்.

முதலமைச்சரின் கடிதத்தில், கடந்த சில மாதங்களாக இதுபோன்று தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் பெருமளவில் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் IND-TN-10-MM-860, IND-TN-10-MM-985, IND-TN-10-MM-915, IND-TN-10-MM-717 மற்றும் IND-TN-10-MM-717 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 28.10.2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர் என்றும்

”நமது மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள நிலையில், அவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது மீனவ சமூகத்தினரிடையே பெரும் துயரத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியிருப்பதை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நன்கு அறிவார்.”என்றும் கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,  

”அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடையின்றி தொடர்கிறது.” என்று வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சர் கடிதம் ஏற்கெனவே தங்களின் துறைக்கு வந்துவிட்டதாகவும், அதனடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகக் குழுவினரிடம் தெரிவித்ததுடன், இலங்கை அதிகாரிகளுடன் இதுதொடர்பாக ஒன்றிய அரசின் சார்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருவதாகவும் வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com