திருச்சியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
திருச்சியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

ஸ்டாலின், எடப்பாடி, பிரேமலதா, சீமான்... சூடு பிடித்த பிரச்சாரம்!

மக்களவைத்தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு, தமிழகத்தில் பல்வேறு அணிகளின் தலைவர்களும் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கோடை வெயிலுக்கு இணையாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 

தி.மு.க. கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த தேதி திருச்சி, சிறுகனூரில் தன் பிரச்சாரத்தைத் தொடங்கினார். திருச்சி தொகுதியில் போட்டியிடும் வைகோ மகன் துரை வைகோ, பெரம்பலூரில் போட்டியிடும் நேரு மகன் அருண் நேரு ஆகியோருக்கு அவர் வாக்கு கேட்டார். தொடர்ந்து, நேற்று முன்தினம்திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நாகை, தஞ்சை தொகுதிகளில் போட்டியிடும் முறையே செல்வராஜ், முரசொலி ஆகியோருக்காக ஸ்டாலின் வாக்கு கேட்டார்.

இரண்டு கூட்டங்களிலும் மைய பா.ஜ.க. அரசையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடிப் பேசினார். 

அ.தி.மு.க. கூட்டணியின் 40 வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், நேற்று திருச்சியில் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தரப்பு சும்மா செங்கல்லை வைத்துக்கொண்டு பம்மாத்து பண்ணுவதாகக் குறிப்பிட்டார். 

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில், மறைமுகமாகப் பா.ம.க.வைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். நேற்றுவரை கூட்டணியில் இருந்துவிட்டு துட்டுக்காக அணி மாறிவிட்டார்கள் என்ற அவர், தன் கணவர் விஜயகாந்த் நடித்த தவசி படத்தின் வசனத்தையும் பேசி கைதட்டல்களைப் பெற்றார். கொங்கு பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. தலைவர்கள் மரியாதையானவர்கள் என்றும் மேடையிலிருந்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பலரையும் சிரிக்கவைத்தார்.

சீமான்
சீமான்

சென்னையில் 40 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்திப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கரகரத்த குரலோடு வழக்கமான ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல், தன் வழக்கமான கோணத்தில் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com