ஸ்ரீவைகுண்டம் ரயில்நிலையத்திலிருந்து கால்நடையாகவே சென்ற பயணிகள்
ஸ்ரீவைகுண்டம் ரயில்நிலையத்திலிருந்து கால்நடையாகவே சென்ற பயணிகள்

ஸ்ரீவைகுண்டம் - ரயில் பயணிகள் 687 பேரும் மீட்பு- சு.வெங்கடேசன் தகவல்!

இரண்டு நாள்களுக்கு முன்னர் திருச்செந்தூரிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில்வண்டி மழையால் ஶ்ரீவைகுண்டத்தில் நின்றது. சுற்றிலும் மழை வெள்ளம் சூழ, மீட்கமுடியாதபடி அதில் 800 பயணிகள் மாட்டிக்கொண்டதாகக் கூறப்பட்டது.

இன்று வெள்ளம் வடியத் தொடங்கியதுடன் மழையும் குறைந்ததும் ஹெலிகாப்டரில் மீட்புப் பணிகள் தொடங்கின. உணவின்றித் தவித்த பயணிகளுக்கு வான்வழியாக உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டன.

பின்னர், அங்கிருந்து பல பயணிகள் நடந்தேசென்று அருகில் உள்ள ஊர்களுக்குப் போய் வீடுதிரும்பவும் செய்தனர். மற்றவர்கள் ரயில்வண்டியிலேயே தவித்தனர்.   

மீட்புப் படையினர், அரசுத் துறையினரின் முயற்சிகளை அடுத்து, முதலில் 553 பயணிகள் 7 பேருந்துகள் மூலம் மணியாச்சி ரயில்நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர். படிப்படியாக மொத்தம் 687 பயணிகளும் அங்கிருந்து அழைத்துவரப்பட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தன் சமூக ஊடகப் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

“பேரிடர் மேலாண்மைக்குழு வீரர்களுக்கு தலைதாழ்ந்த வணக்கம்.

ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து 7 பேருந்துகளில் 553 பயணிகள் மணியாச்சி வந்து சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர இரண்டு பேருந்து மற்றும் ஒரு டிரக் வண்டியில் பயணிகள் மணியாச்சி வந்து கொண்டிருக்கின்றனர். வரும் வழியில் ரெட்டியார்ப்பட்டியில் அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.

இவர்களும் மணியாச்சி வந்து சேர்ந்ததும், மணியாச்சியிலிருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் புறப்படும். அந்த ரயில், செந்தூர் விரைவு வண்டி எந்த நிறுத்தத்தில் எல்லாம் நிற்குமோ அந்த நிறுத்தத்தில் எல்லாம் நின்று செல்லும்.

ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்த 687 பயணிகளும் மீட்கப்பட்டுள்ளனர் என்ற மகிழ்வான செய்தி வந்து கொண்டிருக்கிறது. அடுத்த சுமார் இரண்டு மணி நேரத்தில் சிறப்பு இரயில் மணியாச்சியிலிருந்து புறப்பட இருக்கிறது. பயணிகளை மீட்க கடந்த இரண்டு நாட்களாக போராடிய ரயில்வே மற்றும் வருவாய்த்துறையின் அனைத்து ஊழியர்களுக்கும், பேரிடர் மேலாண்மைக்குழு வீரர்களுக்கும், எல்லாவகையிலும் கவனப்படுத்திய ஊடக நண்பர்களுக்கும் தலை தாழ்ந்த வணக்கம்.” என்று வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com