
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததற்காக, மனுதாரருக்கு ரூ.5000 இழப்பீடாக வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரசுக்கு முதன்மையான வருமானமே டாஸ்மாக் மூலம் தான் வருகிறது.
எனினும் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட (MRP) கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் மாதாவரம் டாஸ்மாக் கடையில் தேவராஜன் என்பவர் மது வாங்கியிருக்கிறார். அவரிடம் எம்.ஆர்.பி-யை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்துள்ளார் விற்பனையாளர்.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக தன்னிடம் வாங்கியதாக, ரூ.1 லட்சம் இழப்பீடு கோரி தேவராஜன் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
இதை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள் கூடுதல் பணம் வசூலிப்பது என்பது ‘நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்று கூறி மாதாவரம் டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு அபராதம் விதித்துள்ளனர்.
மனுதாரருக்கு கடை விற்பனையாளர் இழப்பீடாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உரிய காலத்தில் வழங்கத் தவறும் பட்சத்தில் இழப்பீட்டு தொகையை 9 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மதுபாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.