10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம் : பா.ம.க.வின் அறிக்கையை எடுத்துச்சொன்ன தி.மு.க. எம்.எல்.ஏ.!

Published on

சட்டப்பேரவையில் பொது நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை பற்றிய விவாதம் இன்றும் தொடர்ந்தது.தி.மு.க. சார்பில் முன்னாள் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணியின் நேற்றைய அறிக்கையில் குறிப்பிட்ட ஒரு பிரச்னையை அவையில் சுட்டிக்காட்டினார். 

அன்புமணியின் அந்த அறிக்கை விவரம்:

“ தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. உழவர்கள் அரும்பாடுபட்டு அறுவடை செய்த நெல்லை குறித்த காலத்தில் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யாதது கண்டிக்கத்தக்கது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, குடவாசல், நன்னிலம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைந்துள்ள கொள்முதல் நிலையங்களில் தான் இந்த அவல நிலை நிலவுகிறது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல சரக்குந்துகள் வராததால் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு அனுப்ப முடியாதது தான் புதிதாக வரும் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் அரசின் அலட்சியமும். திட்டமிடல் இல்லாமையும் தான். காவிரி பாசன மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாவிட்டால் அவை முழுமையாக வீணாகி விடும்.

வறட்சி காரணமாக குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நடப்பாண்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில் அரும்பாடு பட்டு விளைவிக்கப்பட்ட நெல் மூட்டைகள் வீணாவதை அரசு அனுமதிக்கக் கூடாது.கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும்.”  என்று அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com