100 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ. 2.79 கோடி ஜி.எஸ்.டி. வரி!

Rukhmani with GST notice
ஜி.எஸ்.டி. நோட்டீஸ் உடன் ருக்மணி
Published on

திருப்பத்தூர் மாவட்டத்தில், 100 நாள் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டிவரும் பெண்ணிற்கு, ரூ. 2.79 கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் வந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் முருகேசனின் மனைவி ருக்மணி. இவர் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தனது 100 நாள் வேலைக்கான கூலிப் பணத்தை எடுப்பதற்காக, திம்ராயன்பேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது கணக்கைச் சரிபார்த்த வங்கிப் பணியாளர்கள், அவருடைய கணக்கு முடக்கப்பட்டு விட்டதாக கூறி உள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ருக்மணி, இதற்கான காரணத்தை வங்கி அதிகாரிகளிடம் கேட்டார்.

அப்போது, மத்திய ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவிலிருந்து அவரது கணக்கை முடக்க உத்தரவு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது பெயரில் தொடங்கப்பட்ட வணிகக் கணக்கு ஒன்றின் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அதற்கான ஜி.எஸ்.டி. வரியாக ரூ.2.79 கோடியை உடனடியாக அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘ஆர்.எம். டிரேடர்ஸ்’ என்ற நிறுவனத்தை அவர் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டிருந்ததாகக் கூறினர்.

முதற்கட்ட விசாரணையில், 100 நாள் வேலைத் திட்டத்திற்காக ருக்மணி கொடுத்த ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்களைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் போலி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

"எனக்கு எழுதப் படிக்க தெரியாது. வங்கியில் பணம் எடுக்கவே கைநாட்டுதான் பயன்படுத்துகிறேன். எனக்கும், இந்த கோடிக்கணக்கான பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இதுகுறித்து விசாரித்து, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வங்கிக் கணக்கை மீட்டுத் தர வேண்டும்." என்று ருக்மணி கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com