தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கொடுத்துவிட்டு அதைக் குறிப்பிட்டு தி.மு.க. அசிங்கப்படுத்துவதாக த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருச்சி காந்தி சந்தை மரக்கடைப் பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு விஜய் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னையிலிருந்து தனி விமானத்தில் வந்த அவர், பேசும் இடத்தை அடைவதற்கே நான்கு மணி நேரம் ஆனது.
தாமதமாகப் பேச்சைத் தொடங்கிய அவர், குறிப்புத் தாளை நன்றாகப் பார்த்துக்கொண்டார்.
வயர் இல்லாத மைக் மூலம் பேசிய விஜய், ரசிகர்களைக் கவரும்படியும் திருச்சி மண்ணைப் போற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டார்.
சிறிது நேரத்தில், மைக் பழுதானதால் வயர் இணைப்பு உள்ள மைக் மூலம் பேசத் தொடங்கினார். ஏனோ அது வேலைசெய்யவில்லை.
மைக் பழுதான நிலையில் விஜய்யின் பேச்சைக் கேட்கத் தயாரான த.வெ.க.வினர் ஏமாற்றம் அடைந்தனர்.
அரையும்குறையுமாகக் கேட்டாலும், ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
பிறகு, தி.மு.க.வுக்கு வாக்களிப்பீர்களா என்றும் அவர் மக்களைப் பார்த்து கேள்வி கேட்டார்.