1,100 தலைமை ஆசிரியர்கள் இடம் காலி; இதுதான் கல்வி இலட்சணமா?

அன்புமணி
அன்புமணி
Published on

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான ஆசிரியர்கள் இருந்தும்  தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப  5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்கவில்லை.” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து தன் சமூகஊடகப் பக்கங்களில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். 


அதில், ”அரசு பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரம் தலைமை ஆசிரியர்கள் தான். அதிலும் குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை  தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மிகவும் முக்கியமானவை.  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை  தலைமை ஆசிரியர்கள் தான் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

ஆனால், இவ்வளவு முக்கியமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 300-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளிலும், 800-க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகளிலும் காலியாக உள்ளன.  இந்த பணியிடங்களை ஒற்றை அரசாணை மூலம் நிரப்ப முடியும். அதற்கு தகுதியான  ஆசிரியர்கள் ஏராளமானோர்  உள்ளனர். ஆனால், ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.  இந்த வழக்குகள் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் தமிழக அரசு சம்பந்தப்பட்டுள்ளது.

திமுக அரசு நினைத்திருந்தால் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், ஐந்தாண்டுகளாக இதற்காக துரும்பைக் கூட அசைக்க வில்லை.  அதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  அரசு பள்ளிகளின் சீரழிவுக்கு தலைமை ஆசிரியர்கள்  இல்லாததும் முக்கியக் காரணம் ஆகும்.

தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது உள்ளிட்ட பல வழிகளில் அரசு பள்ளிகளை சீரழித்த திமுக அரசு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என கொண்டாட்டங்களை நடத்துவது கொடூரமானது ஆகும்.” தமிழ்நாட்டின் வரலாற்றில் கல்வித்துறை மிக மோசமான சீரழிவை சந்தித்தது கடந்த ஐந்தாண்டுகளில்தான்.” என்று அன்புமணியின் இடுகையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com