இந்த ஆண்டு நடைபெற்ற 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
8,07,098 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதில் 7,43,232 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டின் மொத்த தேர்ச்சி சதவீதம் 92.09% ஆகும். 95.13% மாணவிகளும் , 88.70% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 6.43% மாணவிகள் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இத்தேர்வில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாவட்டங்கள்: அரியலூர் 97.76%, ஈரோடு 96.97%, விருதுநகர் 96.23%, கோயம்புத்தூர் 95.7% , தூத்துக்குடி 95.07% .
தேர்வு எழுதிய 9295 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 8460 தேர்ச்சி பெற்று 91.91 சதவீதமாக உள்ளது.
125 சிறைவாச மாணவர்களில் 113 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 4326 தனித்தேர்வர்களில் 950 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அரசு பள்ளிகளில் 87.34%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.09%, 9 தனியார் சுயநிதி பள்ளிகளி்ல் 8.03% ஆக உள்ளது.
மேலும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களின் எண்ணிக்கை 11,025 ஆக உள்ளது.
கடந்த ஆண்டு பொதுத்தேர்வை விட தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு 0.92% உயர்ந்துள்ளது.
தமிழ் பாடத்தில் 41, ஆங்கிலத்தில் 39, இயற்பியலில் 390, வேதியலில் 593, உயிரியல் 91, கணிதத்தில் 1338, தாவரவியலில் 4, விலங்கியலில் 2, கணினி அறிவியலில் 3535, வரலாற்றில் 35, வணிகவியலில் 806, கணக்குப்பதிவியலில் 113, பொருளியலில் 254, கணினி பயன்பாடுகளில் 861, வணிக கணிதம் மற்றும் புள்ளியியலில் 117 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.
துறைவாரியாக பார்க்கும் பொழுது அறிவியல் பாடப் பிரிவுகளில் 95.08%, வணிகவியல் பாடப்பிரிவுகளில் 87.33%, கலைப் பிரிவுகளில் 77.94%, தொழிற் பாட பிரிவுகளில் 78.31% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மே 19 முதல் www.dge.tn.gov இணையதளத்தில் தற்காலிக சான்றிதழை பெறலாம் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் கூறியுள்ளது.10 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவித்ததை போலவே இவர்களும் துணைத் தேர்வு எழுத மே 22 முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். துணைத் தேர்விற்கான அட்டவணை இன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வரும் 22ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.