இந்தியாவில், கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத வெப்பம், முடிந்த 2024ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு நாடு முழுவதும் வெயில் வாட்டியது. பெரும்பாலான மாநிலங்களில் பகல் நேர வெப்பம் புதிய உச்சங்களை எட்டியது. இது தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது:
இந்தியாவில் 1901ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான பதிவுகளின் அடிப்படையில், முடிந்து போன 2024ஆம் ஆண்டுதான் அதிகப்படியான வெப்பம் பதிவான ஆண்டாக உள்ளது. கடந்தாண்டு வெப்பநிலை, இயல்பை விட 0.54 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை, நீண்ட கால சராசரியை விட 0.90 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
ஐரோப்பிய காலநிலை ஏஜென்சி தகவலின்படி, கடந்த ஆண்டு பதிவில் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டில் உலகம் சராசரியாக 41 நாட்கள் ஆபத்தான வெப்பத்தை அனுபவித்ததாக காலநிலை விஞ்ஞானிகளின் குழுக்களின் அறிக்கை கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.