பல்வீர் சிங்
பல்வீர் சிங்

15 பேரின் பல்பிடுங்கிய கொடூரம் - சிபிசிஐடி விசாரணையில் பல்வீர்சிங் குரூரத்துக்கான பின்னணி தெரிந்தது!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீஸ் உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீர்சிங் 15 பேரின் பற்களைப் பிடுங்கி கொடுமை செய்தது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் சந்தேக நபர்களாகப் பிடித்துச்செல்லப்பட்ட 15 பேரை, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய ஊர்களில் காவல்நிலையங்களில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர்களின் பற்களை ஆயுதத்தால் பிடுங்கி கொடுமைசெய்து மிரட்டியது வெளியே வந்தது. அதைச் செய்தவர், அப்போதுதான் பயிற்சி முடித்து உதவிக் கண்காணிப்பாளராகப் பணிக்கு வந்த பல்வீர்சிங் என்பவர்தான் என்றும் உறுதியானது. 

பல்வேறு மனிதவுரிமை அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இந்தக் கொட்டடிச் சித்திரவதைக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், சட்டப்பேரவையிலும் பிரச்னை எதிரொலித்தது. உடனே, குற்றவாளியென சாட்டப்பட்ட அதிகாரி பல்வீர்சிங்கை இடைநீக்கம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார். அத்துடன், இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. 

இந்த விவகாரத்தில் நான்கு வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி காவல்பிரிவினர், பல்வீர்சிங் குற்றத்தில் ஈடுபட்டதை உறுதிசெய்தனர். மருத்துவர்கள், தடயவியல் துறையினர் தெரிவித்த தகவல்களின்படி விசாரணைப் படை இந்த முடிவுக்கு வந்தது. 

தனிப் படையின் விசாரணையில் குரூரமான இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது. குற்றவாளி சாட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல்வீர்சிங்கின் உறவினர் ஒருவர், வடமாநிலத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றியதாகவும் அவர் எப்போதும் தன்னுடைய பணியிடத்தில் கொடுமையாக சந்தேக நபர்களிடம் இப்படித்தான் கொடுமையாக பற்களைப் பிடுங்குவதை பாணியாக வைத்திருந்தார் என்றும் அதைப் பார்த்து மற்றவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள் எனும் எண்ணத்தில் பல்வீர்சிங்கும் அவ்வாறே செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com