
தொடர்ந்து 159ஆவது நாளாகப் போராட்டம் நடத்திவரும் தூய்மைப் பணியாளர்களில் 4ஆவதாக இன்று மேலும் ஒரு தூய்மைப் பணியாளர் உயிரிழந்தார்.
அவருடைய பெயர் ராஜேந்திரன். சென்னை மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்துக்கு உட்பட்ட 62ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த அவர், கடந்த நான்கு மாதங்களாக வேலை தரப்படாமல் மன உளைச்சலில் இருந்துவந்தார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் உயிரிழந்தார்.
முன்னதாக, மூன்று தூய்மைப் பணியாளர்கள் இந்தப் போராட்டம் தொடங்கியபின்னர் ஊதியமில்லாமல் வாழ்வாதாரப் பிரச்னையில் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துபோயுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என உழைப்போர் உரிமை இயக்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.
தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அவர்களை முதலமைச்சர் அழைத்துப் பேசவும் வேண்டும் என சமூகச் செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள் கையெழுத்திட்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.