16% மட்டுமே சொந்த மின்சாரம்... கொள்ளையடிக்க வசதியாகவா?

tneb
மின்சார வாரியம்
Published on

தமிழக மின் தேவையில் 16% மட்டுமே சொந்த உற்பத்தி என்றும் ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்க மக்கள் தலையில் கட்டண உயர்வை சுமத்துவதா என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

”தமிழ்நாட்டில் 2024---&-25ஆம் ஆண்டில் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள மின்சாரத்தில் வெறும் 16% மட்டுமே மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டதாகவும், 80.66% மின்சாரம் வெளியாரிடமிருந்து வாங்கப்பட்டிருப்பதாகவும் மின்வாரியம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மின் தேவையில் ஆறில் ஒரு பங்கு மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்யும் அளவுக்கு மின்சார வாரியத்தை திமுக ஆட்சியாளர்கள் சிதைத்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.” என அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 

”தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வாயிலாக வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு 13,860 கோடி யூனிட் மின்சாரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு வெறும் 2240 கோடி யூனிட்டுகள் தான். இது தமிழகத்தின் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 16.16% மட்டும் தான். இது தவிர நீர் மின்சாரம் மூலம் 440 கோடி யூனிட் கிடைத்துள்ளது. இவை இரண்டையும் சேர்த்தாலும் கூட மின் வாரியத்தின் சொந்த உற்பத்தி 2680 கோடி யூனிட்டுகள், அதாவது 19.34% மட்டுமே.

அதே நேரத்தில் மத்திய மின் தொகுப்பு, தனியார் மின் நிறுவனங்கள், மின்சார சந்தைகள் ஆகியவற்றிடம் இருந்து மட்டும் 11 ஆயிரத்து 179 கோடி யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் மொத்த மின்சாரத் தேவையில் 80.66% ஆகும். இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் அரசியலமைப்புச் சட்டப்படியான முதல் அரசு 1952-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கப்பட்டது. அதன் பின் 73 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் மாநிலத்தின் மொத்தத் தேவையில் 16% மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்யும் அளவுக்கு தான் மின்சார வாரியம் செயல்படுவது வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தியாகும். இதற்கு ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு.

தமிழ்நாடு மின்சார வாரியம் 2024-&25ஆம் ஆண்டில் மட்டும் ரூ.75,960 கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்துள்ளது. இந்தத் தொகையை முதலீடு செய்தால் 6000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களை அமைத்திருக்க முடியும். அவற்றின் மூலம் ஆண்டுக்கு 9 ஆயிரம் கோடி மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்க முடியும். ஒன்றரை ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்கும் செலவில் மின் திட்டங்களை செயல்படுத்தினால் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாகி விடும். அத்தகைய நிலை ஏற்படுத்தப்பட்டால், மக்களிடம் இப்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் பாதி கட்டணத்தில் மின்சாரத்தை வழங்க முடியும்.

ஆனால், அதை செய்ய திமுக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. காரணம்.... அத்தகைய நிலை ஏற்படுத்தப் பட்டால், மக்களுக்கு நன்மை கிடைக்குமே தவிர ஆட்சியாளர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. மின் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருந்தால் தான் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி ஊழல் செய்ய முடியும். கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 179 யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.15,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கக் கூடும் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மின்சாரக் கொள்முதல் மூலம் கிடைக்கும் தொகையை இழக்க விரும்பாததால் தான் புதிய அனல் மின் திட்டங்களை செயல்படுத்த திமுக அரசு தயாராக இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரை ஒரே ஒரு மெகாவாட் அளவுக்கு கூட புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. ரூ.10,158 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அதி உய்ய அனல் மின்நிலையம்&-3 கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டு 20 மாதங்கள் ஆகும் நிலையில், இன்று வரை அதில் வணிகரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்படவில்லை. மின் திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசுக்கு ஆர்வமில்லை; தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதில் தான் ஆர்வம் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.

2022&ஆம் ஆண்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட போது மின்சார வாரியத்தின் நஷ்டம் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடியாகத் தான் இருந்தது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டதன் மூலம் கடந்த 2022&23ஆம் ஆண்டின் 7 மாதங்களில் ரூ. 23,863 கோடி, 2023&24ஆம் ஆண்டில் ரூ.35 ஆயிரம் கோடி, 2024&25ஆம் ஆண்டில் 41,500 கோடி, 2025&26ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் ரூ.28 ஆயிரம் கோடி என இதுவரை ரூ.1 லட்சத்து 28, 363 கோடி மின்வாரியத்திற்கு கூடுதலாக வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனால், மின்வாரியம் இன்னும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணம் மின்சாரக் கொள்முதல் ஊழல்கள்.

திமுக ஆட்சியாளர்கள் தனியாரிடம் மின்சாரம் வாங்கி பல்லாயிரம் கோடி ஊழல் செய்வதற்காகவே மின் திட்டங்களை செயல்படுத்த மறுக்கிறார்கள். தாங்கள் கொள்ளையடிப்பதற்காக மக்கள் தலையில் மின்சாரக் கட்டண உயர்வு என்ற பெரும் சுமையை சுமத்தும் மோசடிசெய்கிறது தி.மு.க. அரசு.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com