இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) நடைபெற்று வருகின்றது; இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட உள்ளது; அதில் பெயர் இல்லாவிட்டால் என்ன செய்யவேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் வெளியிட்டுள்ளார்.
அவரின் இன்றைய செய்திக்குறிப்பு:
”இந்த நடவடிக்கையானது, எந்த தகுதியான வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டினைப் பின்பற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முந்தைய காலகட்டத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs), மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சென்று அணுகியபோதும் தொடர்பு கொள்ள முடியாத வாக்காளர்கள் அதாவது இறந்தவர்கள், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளர்கள் (Absent), இடம் பெயர்ந்தவர்கள் (Shifted), இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் என குறிக்கப்பட்ட வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியலை (ASD பட்டியல்கள்) தயாரித்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் (BLAs) நடத்தப்பட்ட கூட்டங்களில் அவர்களுக்கு பகிரப்பட்டுள்ளன. இக்கூட்டங்களின் நடவடிக்கை குறிப்புகள் BLO App-ல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ASD பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரின் உண்மையான நிலையை உறுதி செய்துகொள்வதற்காகவும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு முன்பே ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை திருத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், இறந்தவர்கள், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளர்கள் (Absent), இடம் பெயர்ந்தவர்கள் (Shifted), இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் (ASD பட்டியல்கள்) இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அணுகுவதற்கான வசதி, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் (DEO) இணையதளங்களில் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இப்பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.” என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.