இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது.
விசாகப்பட்டினத்தில் கடந்த வெள்ளியன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 396 ஓட்டங்களை எடுத்தது. இங்கிலாந்து அணியோ 253 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இரண்டாவது இன்னிங்சில் மட்டையைப் பிடித்த இந்திய அணி, 255 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
அதையடுத்து, 399 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இங்கிலாந்து அணி தன் இன்னிங்சைத் தொடங்கியது. நேற்றும் இன்றும் தொடர்ந்து ஆடியதில் இந்திய ஆட்டக்காரர்களின் பந்துவீச்சை அவர்களால் எதிர்கொண்டு நிற்கமுடியவில்லை.
மொத்தம் 292 ஓட்டங்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, இங்கிலாந்து அணி.
106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணிக்கு சிறப்பான வெற்றி கிடைத்தது.
பும்ரா, அஸ்வின் ஆகியோர் அதிகபட்சமாக தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில், தற்போது இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி எனும் நிலையில், சமமாக உள்ளன.