அ.சவுந்தரராசன், சிஐடியு
அ.சவுந்தரராசன், சிஐடியு

2 மாதம் பேசி கைவிரித்த அரசு பொங்கல் பழிபோட சதி - சிஐடியு குற்றச்சாட்டு!

போக்குவரத்துக் கழக ஊழியர் கோரிக்கை பற்றி 2 மாதங்களாகப் பேசி இழுத்தடித்துவிட்டு இப்போது பொங்கல் வந்துவிட்டதெனக் கைவிரிக்கும் அரசுதான் வேலைநிறுத்தம் வர காரணம் என்று சிஐடியு சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 

பேட்டி ஒன்றில் சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் கூறியுள்ளதாவது:

“ மூன்று ஆண்டுகளுக்கொருமுறை செய்யப்பட வேண்டிய ஒப்பந்தம், கடந்த ஆட்சியில் செய்யாமல் இந்த ஆட்சிக்கு வந்தபிறகு 3 ஆண்டு கடந்து ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனாலும் தாமதத்தால் 5 ஆண்டுகள்போல ஆகிவிட்டது. 2 ஆண்டுகள் இழப்பு. அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காக 15ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சைத் தொடங்குங்கள் என்பது தொழிலாளர்களின் எதிர்காலம் தொடர்பானது. மீதி 5 கோரிக்கைகள், ஏற்கெனவே ஊழியரிடம் பிடித்துவைத்த பணம், பாக்கி வைத்துள்ள பணம், சட்டவிரோதமாக செலவுசெய்யப்படுகிறது. எட்டு ஆண்டுகளாக 13 ஆயிரம் கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது. ஓய்வுபெற்ற தொழிலாளிகளில் 6 ஆயிரம் பேர் இறந்தேபோய்விட்டார்கள். 

பொங்கல் நேரத்தில் என பழி போடுகிறார்கள். இதுவரை ஏழு பொங்கல் போய்விட்டது. எங்கள் பணம். இது ஒருவகையில் கையாடல். என் பணத்தைக் கேட்டால் தப்பா என்பதுதான் வேலைநிறுத்தம். 

நிதிச்சுமைக்கும் இதற்கும் தொடர்பும் இல்லை. ஊழியரின் நிதியை எடுத்து மற்ற செலவுகளைச் செய்திருக்கிறது, அரசு. ஓய்வுபெற்றவர்களுக்கான 2 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி. மாதம்தோறும் 46% பஞ்சப்படி அவர்களின் ஓய்வூதியத்தில் சேரவேண்டும். அதைத் தராமல் நிறுத்திவைத்துக்கொண்டே இருக்கிறார்கள். பணியில் உள்ள தொழிலாளர்க்கு நான்கு மாத பஞ்சப்படி தரவில்லை. அவர்களின் பிஎஃப், எல்ஐசி, சொசைட்டி என 10 ஆயிரம் கோடி ரூபாய் பிடித்துவைத்து இவர்கள் பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள், நிர்வாகம் செய்கிறார்கள். 

ஆனால், அரசுக்கு கஷ்டம் என தாங்கமுடியாது என்றால், அரசு பணத்தைத் தராததால் தொழிலாளர்களின் குடும்பம் எவ்வளவு பாடுபடும்! அரசின் கஷ்டத்தைத் தீர்க்க அதற்கான திட்டங்களைப் போடுங்கள். வரவுக்கு வழிசெய்யுங்கள். செலவைக் குறையுக்க முயற்சி செய்யுங்கள்.  உழைக்கும் தொழிலாளியின் பணத்தில் கைவைக்க யாருக்கும் உரிமை இல்லை. ஏற்கெனவே இருந்த ஆட்சி செய்தது. அதையே தி.மு.க. அரசும் செய்கிறது. 

சம்பள உயர்வுக்காக இந்த வேலைநிறுத்தம் நடக்கவில்லை. எங்களின் பணத்தை அரசாங்கம் எடுத்துவைத்துக்கொண்டதைக் கேட்கிறோம். பிச்சையா கேட்கிறோம்? 

ஆறு மாதமாக தள்ளித்தள்ளி வாய்தா கேட்டார்கள். கடந்த 19ஆம்தேதியே நோட்டீஸ் கொடுத்துவிட்டோம். டிச.4ஆம்தேதியிலிருந்து எப்போதும் வேலைநிறுத்தம் செய்வோம் எனக் கூறிவிட்டோம். பொங்கல் பழியை எங்கள் மீது போட அரசு சதிசெய்கிறது என்றுதான் பொருள். 

நாங்கள் அதிகமாகவோ புதியதாகவோ கேட்கவில்லை. அரசுதான் இதில் குற்றவாளி. இந்தஆட்சி, அந்தஆட்சி என்று எங்களுக்கு இல்லை. அதிமுகவுடன் சேர்ந்து போராடுகிறீர்கள் எனக் கேட்கும் அமைச்சரிடம் நான் கேட்கிறேன், திமுகவின் தொமுச எதற்கெல்லாம் போராடியதோ அதற்குத்தான் நாங்களும் போராடுகிறோம். 

உரிய பயிற்சி இல்லாதவர்களைக் கூட்டிவந்து வண்டியை ஓட்டுகிறார்கள். இது தவறானது. விபத்துகள், பொருட்சேதம், உயிர்ச்சேதம் நிகழ வாய்ப்புண்டு. விஷப் பரிட்சையில் அரசு இறங்குவதும் தவறு. இதை மாற்றிக்கொள்ள வேண்டும். பணியில் இருப்பவர்களுக்கு 4 மாத பஞ்சப்படியைத் தந்தால் அவர்கள் பொங்கலைக் கொண்டாடுவார்கள். ” என்று அ.சவுந்தரராசன் கூறினார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com