டெல்டா மாவட்டங்களில் நீரில் மூழ்கிய நெற்பயிர்
டெல்டா மாவட்டங்களில் நீரில் மூழ்கிய நெற்பயிர்

'2 லட்சம் ஏக்கர் நெற் பயிர்களைக் காப்பாற்ற வேண்டும்!'

காவிரிப் படுகையில் தொடர் மழை காரணமாக மூழ்கியுள்ள 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அங்கு 17 செ.மீ மழை பெய்திருந்தது. இன்று காலை 8 மணி வரை 12 செ.மீ மழை பெய்திருக்கிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.” என்றும்,

”மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் கூடுதலான பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களின் பிற பகுதிகளிலும் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.”என்றும் தெரிவித்துள்ளார்.

உடனடியாக மழைநீர் அகற்றப்படாவிட்டால், பயிர்கள் அழுகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

”காவிரியில் போதிய தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பெருமளவில் தோல்வியடைந்தது. அதனால், உழவர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகினர். இப்போது சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் உழவர்களுக்கு கூடுதல் இழப்பு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது. தொடர் மழையால், தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அதன் இரண்டாவது சுரங்கத்தில் தேங்கியுள்ள தண்ணீரை பத்துக்கும் மேற்பட்ட இராட்சத குழாய்களைக் கொண்டு வெளியேற்றி வருகிறது. அதனால், கீழ்வளையமாதேவி, உய்யகொண்டான், சேப்பளாநத்தம் உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதற்காக என்.எல்.சி. நிறுவனத்திற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிப்பதுடன், உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீட்டையும் என்.எல்.சி. நிறுவனத்திடமிருந்து பெற்றுத்தர வேண்டும்.” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com