2 தி.மு.க., 1 அ.தி.மு.க. வேட்பாளர்கள் பணம்- தேர்தலை ரத்துசெய்யக் கோரிக்கை

2 தி.மு.க., 1 அ.தி.மு.க. வேட்பாளர்கள் பணம்- தேர்தலை ரத்துசெய்யக் கோரிக்கை
Published on

நாளைய தேர்தலில் இரண்டு தி.மு.க. வேட்பாளர்கள், அ.தி.மு.க. வேட்பாளர் ஒருவர் தொடர்பாக பணப்பட்டுவாடா புகார் எழுந்துள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவை இரத்துசெய்யுமாறு அறப்போர் இயக்கம் தேர்தல் ஆணையத்தைக் கோரியுள்ளது. 

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், இணை அதிகாரி ஸ்ருதஞ்சய் நாராயணன், தமிழகத் தேர்தல் சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனு அனுப்பியுள்ளது.

அதில், “ கடந்த மூன்று நாள்களாக தமிழகத்தில் வாக்குக்குப் பணம் தருவது தொடர்பான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. முதலில், நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரபாகரன் வாக்குக்குப் பணம் தருவதைப் பற்றிப் பேசியது தெளிவாக இருக்கிறது. இரண்டாவதாக, சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வேலுவின் உதவியாளரெனக் கூறப்படும் சத்தியமூர்த்தியின் வீட்டில் தேர்தல் ஆணையமே நடத்திய சோதனையில் 79 இலட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்றாவது, மதுரை, திருமங்கலம் தி.மு.க. வேட்பாளர் மணிமாறனின் மகள் ஆயிரம் ரூபாயை எப்படி விநியோகிப்பது எனப் பேசும் ஆடியோ பிடிபட்டுள்ளது.” என விவரித்துள்ள அறப்போர் இயக்கத்தினர்,

“தெளிவான சாட்சிகள், ஆதாரங்கள் கிடைத்த இடங்களில்கூட தேர்தல் ஆணையம் சிறிதளவே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடத்தினால் மோசடிகளே நிகழும். எனவே, இந்தத் தொகுதிகளில் வாக்குப்பதிவை நடத்தாமல் நிறுத்திவைக்க வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com