
வேளாண் கூட்டுறவு சொசைட்டிகளில் 20 கிலோ நகை மோசடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திருப்பித்தர அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல கோடி ரூபாய் முறைகேடுகளை கண்டித்தும், விவசாயிகள் பறிகொடுத்த நகைகளையும் பணத்தையும் தரக்கோரி சென்னை கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகம் முன்பாக 05.01.2026 அன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை ஏற்கப்பட்டதன் அடிப்படையில் காத்திருக்கும் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
அதன் விவரம் வருமாறு,
1. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் 493 விவசாயிகள் அடகு வைத்த 1790 பவுன் நகைகளும் 2010ம் ஆண்டு காணாமல் போய்விட்டது என்று கூறிவிட்டார்கள். கடந்த 15 ஆண்டு காலமாக நகைகளை இழந்த விவசாயிகள் நகைகளை கேட்டு போராடி வருகிறார்கள். அவர்களின் நகைகளை மாநில அரசு அதற்குண்டான பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. மாநில அரசு திருநாவலூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த 18 கிலோ தங்க நகைகளுக்கு உரிய பணத்தை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்று மாநில அரசுக்கு சிபாரிசு செய்வதாக கூட்டுறவு பதிவாளர் ஒப்புக் கொண்டார்.
2. விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தில் 125 விவசாயிகள் வைப்பு நிதியாக போட்டு வைத்த 2 கோடியே 21 லட்சம் ரூபாயை இல்லை என்று கூறிவிட்டனர். 2017 முதல் விவசாயிகள் பணத்தைக் கேட்டு போராடி வருகிறார்கள். பேச்சுவார்த்தையில் கூட்டுறவு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிதியிலிருந்து 125 விவசாயிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்வதாகவும், சம்மந்தப்பட்ட வங்கியில் மோசடி குறித்த வழக்கு முடிந்த பிறகு அவரவருக்கு மீதி தொகையை வழங்குவதாக பதிவாளர் ஒப்புக்கொண்டார்.
3. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 54 விவசாயிகள் கறவை மாடு கடன் பெற்றனர். இதற்கு ஈடாக விவசாயிகளிடம் சட்டவிரோதமாக சொசைட்டி நிர்வாகம் 2 1/2 கிலோ நகைகளை பெற்றுள்ளனர். விவசாயிகளுக்கு நகைகளை சொசைட்டி நிர்வாகம் திருப்பி தரவில்லை. காணவில்லை என்று கூறுகின்றனர். நகைகளை இழந்த விவசாயிகளுக்கு உரிய பணத்தை வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. கலசப்பாக்கம் கூட்டுறவு சொசைட்டியில் ஊழியர்களாக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி, சாமுண்டீஸ்வரி, அண்ணாதுரை அவர்களது 4.45 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வழக்கில் உள்ளது. சொத்துக்களை ஏலம் விட்டு விரைவாக நகைகளை இழந்த விவசாயிகளுக்கு உரிய பணம் வழங்க ஏற்பாடு செய்கிறோம் என்று பதிவாளர் ஒப்புக் கொண்டார்.
4. திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் சுயஉதவிக்குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் செலுத்தி பணம் வங்கியில் வரவு வைக்கப்படவில்லை.
பலகோடி ரூபாயை மோசடி செய்துள்ளார்கள். பணத்தை இழந்த சாதாரண ஏழை மக்கள் மனஉலைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் பணத்தைப் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து முழுமையான விசாரணை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பணத்தை வழங்கிட சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதாக கூட்டுறவு பதிவாளர் ஒப்புக் கொண்ட அடிப்படையில் காத்திருக்கும் போராட்டம் முடித்து கொள்ளப்பட்டது.
போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் டி.ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் த.ஏழுமலை, துணைச்செயலாளர் எம்.வி.ஏழுமலை, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சுந்தரமூர்த்தி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், மாவட்ட தலைவர் ஏ.தாண்டவராயன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் டி.கே.வெங்கடேசன், தென்சென்னை மாவட்ட செயலாளர் எம்.சந்திரன் உள்ளிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.