
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-ல் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான தேசிய மேடை உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி அமைப்புகள், ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.
புதுதில்லியில் இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரம்:
” மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-ல் மாற்றுத்திறனாளிகளைப் பதிவு செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள வகைப்பாடுகளில் காணப்படும் குறைபாடுகள் மிகவும் கவலைக்குரியதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும் என்று நாங்கள் — மாற்றுத்திறனாளிகள் உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள் — கருதுகிறோம்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016 (RPwD Act) 21 வகையான “குறிப்பிட்ட மாற்றுத்திறன்களை” அங்கீகரிக்கிறது. ஆனால், கிடைத்துள்ள தகவல்களின்படி, 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மாற்றுத்திறன் 9 வகைகளில் மட்டுமே பதிவு செய்யப்பட உள்ளது. அவை:
1. பார்வைக் குறைபாடு
2. செவித்திறன் குறைபாடு
3. பேச்சுக் குறைபாடு
4. இயக்கத்திறன் குறைபாடு
5. அறிவுசார் மாற்றுத்திறன்
6. மனநலக் குறைபாடு
7. அமிலத் தாக்குதலால் ஏற்பட்ட மாற்றுத்திறன்
8. நாள்பட்ட நரம்பியல் நோய்
9. இரத்தக் கோளாறு.
இதில், “Mental Retardation” என்பதற்குப் பதிலாக “Intellectual Disability” என்று பெயர் மாற்றப்பட்டிருப்பதைத் தவிர, முதல் ஆறு வகைகளும் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலேயே இடம்பெற்றிருந்தன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ளவை அமிலத் தாக்குதல், நாள்பட்ட நரம்பியல் நோய்கள் மற்றும் இரத்தக் கோளாறுகள் ஆகிய மூன்று பிரிவுகளாகும்.
மாற்றுத்திறனாளிகளின் 21 வகையான மாற்றுத்திறன்களும் பதிவு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்த உறுதியான வாக்குறுதி இருந்தபோதிலும் இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
RPwD Act, 2016 அங்கீகரிக்கும் 21 மாற்றுத்திறன்கள்
1. இயக்கத்திறன் குறைபாடு (Locomotor Disability)
2. தொழுநோயிலிருந்து குணமடைந்தவர்கள்
3. பெருமூளை வாதம் (Cerebral Palsy)
4. உயரம் குறைபாடு (Dwarfism)
5. தசைச் சிதைவு நோய் (Muscular Dystrophy)
6. அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள்
7. முழுப் பார்வையின்மை (Blindness)
8. குறைந்த பார்வைத்திறன் (Low Vision)
9. காது கேளாமை (Deaf)
10. குறைந்த செவித்திறன் (Hard of Hearing)
11. பேச்சு மற்றும் மொழிக் குறைபாடு
12. அறிவுசார் மாற்றுத்திறன் (Intellectual Disability)
13. குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள் (Specific Learning Disabilities)
14. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (Autism Spectrum Disorder)
15. மனநலக் குறைபாடு (Mental Illness)
16. பல்குவளை நரம்புத் தளர்ச்சி நோய்(Multiple Sclerosis)
17. பார்கின்சன் நோய் (Parkinson’s Disease)
18. ஹீமோபீலியா (Haemophilia)
19. தலசீமியா (Thalassemia)
20. அரிவாள் செல் நோய் (Sickle-cell Disease)
21. பல்வகை மாற்றுத்திறன்கள், செவிப்பார்வையின்மை உள்ளிட்டவை (Multiple Disabilities including Deafblindness).
முன்மொழியப்பட்டுள்ள 9 வகைப் பிரிவு, சட்டரீதியான மற்றும் சமூக ரீதியான உண்மைகளைப் போதுமான அளவில் பதிவு செய்யத் தவறுகிறது.
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள், குள்ளத்தன்மை, தொழுநோயிலிருந்து குணமடைந்தவர்கள், செவிப்பார்வையின்மை உள்ளிட்ட பல்வகை மாற்றுத்திறன்கள் போன்றவை தனித்தனி பிரிவுகளாக இடம்பெறாதது மிகவும் வருத்தத்திற்குரியது.
அதேபோல், பெருமூளை வாதம், தசைச் சிதைவு நோய், மல்ட்டிபிள் ஸ்க்ளெரோசிஸ் மற்றும் பார்கின்சன் நோய் போன்றவை தனித்தனி வகைகளாகப் பதிவு செய்யப்படாமல், விரிவான பொதுப் பிரிவுகளுக்குள் இணைக்கப்படுகின்றன.
மேலும், தலசீமியா, ஹீமோபீலியா மற்றும் அரிவாள் செல் நோய் ஆகிய மூன்று தனித்துவமான மாற்றுத்திறன் நிலைகளும் ஒரே “இரத்தக் கோளாறு” என்ற பிரிவுக்குள் சுருக்கப்படுகின்றன.
இத்தகைய வகைப்பாடு கணக்கெடுப்புப் பணியாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்துவதுடன், துல்லியமற்ற புள்ளிவிவரங்களையும் உருவாக்கும். இதன் விளைவாக மாற்றுத்திறனாளிகளின் சில பிரிவுகள் அரசு புள்ளிவிவரங்களில் இருந்து முற்றிலுமாகக் காணாமல் போகும் நிலை ஏற்படும்.
அரசின் கொள்கை உருவாக்கம்,திட்டங்களை வடிவமைத்தல்,நிதி ஒதுக்கீடு,அரசின் பொறுப்புணர்வு..ஆகியவற்றில் ஏற்படும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிக்க வேண்டும்; காலாவதியான மற்றும் போதுமானதாக இல்லாத வகைப்பாடுகளைத் தொடர்ந்து நிலைநிறுத்தக் கூடாது.
எனவே, Census 2027-க்கான மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கேள்வித்தாளில், RPwD Act, 2016 அங்கீகரித்துள்ள 21 மாற்றுத்திறன்களும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
இதற்குக் குறைவான எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான தேசிய மேடை வலியுறுத்தியுள்ளது.