மாதிரிப் படம்

240 கொலைகள்... 4 ஆண்டுகளில்! - இரத்த நகரமா நெல்லை?

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 240 கொலைகள் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரு நாள்களுக்கு முன்னர் முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜா என்பவரை நட்டநடு சாலையில் வைத்து வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் மாநிலத்தையே அதிரவைத்தது.

இந்த நிலையில் மருதுபாண்டி என்பவர் நெல்லை மாநகரக் காவல்துறைக்கு தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இதுகுறித்து விவரங்களைக் கேட்டிருந்தார். கடந்த ஆண்டுகளில் எத்தனை கொலைகள் நடந்துள்ளன? கொலை வழக்கில் இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? முன்விரோதக் கொலைகள் எத்தனை? ஆணவ, சாதியக் கொலைகள் எத்தனை என்பன உட்பட்ட பல கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.

அவருக்குக் கிடைத்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் நெல்லை நகர்ப் பகுதில் 58 கொலைகளும், புறநகர்ப் பகுதியில் 182 கொலைகளும் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

பெரும்பாலான கொலைகள் முன்விரோதம் காரணமாக நிகழ்ந்துள்ளன.

சாதிரீதியான 16 கொலைகளில் ஆணவக் கொலையும் அடக்கம்.

கொலை வழக்கு தொடர்பாக மொத்தம் 887 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 335 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொலை வழக்குகளில் கைசெய்யப்பட்டவர்களில் 48 பேர் சிறுவர்கள் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com