அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

125 நாள் போராட்டம் : 27 விவசாயிகளை விடுவிக்க வேண்டும் - அன்புமணி!

சிப்காட் மூன்றாவது விரிவாக்கத்துக்காக பயிர்நிலங்களைத் தரமறுத்து போராடிவரும் விவசாயிகள் 27 பேரைக் காணவில்லை என்றும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். 


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்திற்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதை எதிர்த்து 125 நாட்களாக உழவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்கள் மீது  அரசும், காவல்துறையும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன; மண்ணைக் காக்க போராடும் மக்களின் உணர்வுகளை மதிப்பதற்கு  பதிலாக, அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைத்தால் வீழ்ச்சியே பரிசாக கிடைக்கும் என்பதை அரசு உணர வேண்டும் என்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். 

”செய்யாறு நகரில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. மொத்தம் 2,937 ஏக்கர் பரப்பளவிலான இந்த தொழிற்பூங்காவில் இரு அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது அலகை அமைப்பதற்காக 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருக்கிறது. அதில் 361 ஏக்கர்  அரசு புறம்போக்கு நிலங்கள் தவிர மீதமுள்ள 2700-க்கும் கூடுதலான ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு சொந்தமான வளமான வேளாண் விளைநிலங்கள். வட ஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்பட்ட 11 கிராமங்களில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பொன் விளையும் பூமியை இழக்க விரும்பாத விவசாயிகள், மேல்மா கூட்டுச் சாலையில் முகாம் அமைத்து கடந்த ஜூலை 2ஆம் நாள் முதல் ஆயிரக்கணக்கில் திரண்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் 125-ஆம் நாளான நேற்று உழவர்கள் அனைவரும் தங்களின் ஆதார் அட்டைகள்,  குடும்ப அட்டைகள் ஆகியவற்றை செய்யாறு கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் நோக்குடன், டிராக்டரில்  பேரணியாக செல்ல முயன்றனர். 200-க்கும் மேற்பட்ட உழவர்களை கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.” என்றும், 

“உழவர்களின் அறப்போராட்டத்தை நிரந்தரமாக  முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வெள்ளிக்கிழமை இரவு முதல் இன்று அதிகாலைவரை போராட்டக் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்தனர். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரான இந்த சோதனைகளுக்கு அவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போராட்டம் நடைபெறும் பந்தலில் தங்கியிருந்த 27 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் போராட்டம் நடைபெற்று வந்த பந்தலை காவல்துறையினர் சட்டவிரோதமாக பிரித்து எரிந்துள்ளனர். ஒரு பிரிவினருக்காக அமைக்கப்படும் தொழிற்பூங்கா, விளைநிலங்களைப் பறித்து இன்னொரு பிரிவினரின் வாழ்வாதாரங்களை முடக்கக் கூடாது.  தொழிலுக்காக உழவு ஒருபோதும் அழிக்கப்படக் கூடாது. தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப் படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.” என்றும் அன்புமணி கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com