3 பல்கலை. துணைவேந்தர் தேர்வுக்குழு- கலைத்தார் ஆளுநர்!

3 பல்கலை. துணைவேந்தர் தேர்வுக்குழு- கலைத்தார் ஆளுநர்!

தமிழ்நாடு அரசாங்கத்துக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையிலான மோதல் போக்கு மட்டுப்பட்டநிலையில், இன்னொரு திருப்பமாக, தான் அமைத்த துணைவேந்தர் தேர்வுக்குழுக்களைக் கலைத்து ஆளுநர் ஆர்.என்.இரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

முன்னதாக, சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசு தேர்வுக்குழுவை நியமித்தது. அதை ஏற்கமறுத்த ஆளுநர் இரவி, யு.ஜி.சி. உறுப்பினர் ஒருவரையும் கட்டாயம் இடம்பெறச் செய்யவேண்டும் எனக்கூறி, தானே தேர்வுக்குழு அறிவிப்பை வெளியிட்டார். 

பல பிரச்னைகளோடு மாநில அரசாங்கத்துடனான இரவியின் விவகாரம், இதனால் மேலும் சூடானது. 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் வழக்கானபோது, இரு தரப்பும் அமர்ந்து பேசுமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 30ஆம் தேதி நான்கு அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் சகிதமாக ஆளுநர் இரவியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். 

அதையடுத்து, இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆளுநரின் சார்பில் கடந்த செப்டம்பரில் அமைக்கப்பட்ட 3 பல்கலை. துணைவேந்தர் தேர்வுக்குழுக்கள் கலைக்கப்படுகின்றன. 

மாநில அரசே யுஜிசி உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழுவை அமைக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com