நவ்வலடியில் சிறுவர்கள் அடக்கம்
நவ்வலடியில் சிறுவர்கள் அடக்கம்

ஊரையே துயரில் ஆழ்த்திய 3 சிறுவர் இறப்பு... சாதிப் பாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் அடக்கம்!

கடலுக்குள் குளிக்கச்சென்று மூன்று சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்தனர். மூவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்கிற நிலையில், சாதியப் பாகுபாட்டை மீறி ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

நெல்லை மாவட்டம் உவரி அருகில் நவ்வலடி கோடவிளையைச் சேர்ந்த சிறுவர்கள் முகேஷ்(வயது 13), ஆகாஷ்(14), ராகுல்(14) ஆகியோர், கடந்த 15ஆம் தேதியன்று மாலையில் குளிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். அப்போது அவர்கள் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டனர். உடன் சென்றதாகக் கூறப்படும் சிறுவன் பிரகாஷ், அதிர்ச்சியாகி ஊருக்குள் சென்று பெரியவர்களிடம் தெரிவித்தார்.

ஓடிவந்த ஊர் மக்கள், சிறுவர்களை மீட்க முயன்றும் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. மறுநாள் சடலமாகத்தான் அவர்களை மீட்க முடிந்தது. மூன்று குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்ததால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இறந்துபோன சிறுவர்களில் முகேசும் ராகுலும் சித்தரிப்பு வீடியோ ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தனர். அதில் முகேஷ், ‘மாப்ள நான் சாகப் போறேண்டா’ எனக் கூற, பதிலுக்கு சிரித்தபடியே ராகுல், ‘நானும் வரேண்டா’ எனக் கூறிய காட்சி இடம்பெற்றிருந்தது.

விளையாட்டாகப் பேசிக்கொண்ட அந்தக் காட்சி, வாழ்க்கையில் உண்மையாகவே நடந்துவிட்டதே என நவ்வலடி கிராம மக்கள் சொல்லிச் சொல்லி வேதனை தெரிவிக்கின்றனர்.

இறந்துபோன சிறுவர்கள் வெவ்வேறு சமூகத்தினர் என்றபோதும், வழக்கமான முறைப்படி சாதியப் பாகுபாடு பார்க்காமல், மூவரின் உடல்களையும் ஒரே இடத்தில் ஊர் மக்கள் அடக்கம்செய்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com