விடாத கருப்பு... 40 ஆண்டு வழக்கில் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு கடுங்காவல் தண்டனை!

விடாத கருப்பு... 40 ஆண்டு வழக்கில் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு கடுங்காவல் தண்டனை!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கில் ஓய்வுபெற்ற மூன்று அதிகாரிகளுக்கு இப்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சராக எம்.ஜி.ஆர். பதவியில் இருந்தபோது, தமிழ்நாட்டில் 1983வாக்கில் சிமெண்ட்டுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் மாநில அரசின் சார்பில் வட, தென் கொரிய நாடுகளிடமிருந்து சிமெண்ட் இறக்குமதி செய்யப்பட்டது. அப்படி வரும் சிமெண்டை அரசின் டான்செம் நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

வேறு தனியார் யாரும் சிமெண்ட் விற்பனை செய்யமுடியாத நிலையில், கட்டடக் கட்டுமானத் திட்டம், பொறியாளரின் சான்றிதழ் போன்றவற்றைக் காட்டி, விண்ணப்பித்தால் மட்டுமே, சிமெண்ட் வழங்கப்பட்டது. இதனால் தங்களின் வியாபாரம் படுத்துக்கொண்டதாக நினைத்த வர்த்தகர்கள் பலரும் குறுக்குவழியில் அரசிடமிருந்து சிமெண்டை வாங்கி விற்றனர்.

அப்படி முறைகேடாக சிமெண்டை ஒதுக்கீடு செய்துதர டான்செம் அதிகாரிகள் இலஞ்சம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வியாபாரியும் 1983ஆம் ஆண்டில் தலா 500 ரூபாய் இலஞ்சமாகத் தந்துள்ளனர் என்றால், இப்போதைய பண மதிப்புக்கு கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

சென்னை, நங்கநல்லூரில் இருந்த ஒரு வர்த்தகர் மட்டும் இப்படியாக 10 டன் சிமெண்ட்டை முறைகேடாக கொள்முதல் செய்துள்ளதைக் கண்டுபிடித்தனர்.

ஊழல் தடுப்புத் துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், 69 போலியான ஆவணங்கள் சிக்கின. நான்கு அதிகாரிகள், ஐந்து வர்த்தகர்கள் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது. ஆனால், 2008ஆம் ஆண்டில் வழக்கிலிருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் நீதிபதி பி. வேல்முருகன் வழங்கிய தீர்ப்பில், நான்கு அதிகாரிகளுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 45 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. சிமெண்ட் வர்த்தகர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான மேலாளர், விசாரணையின்போதே இறந்துவிட்டார். மற்ற மூவரும் 65 வயதைக் கடந்தநிலையில், பலவித உடல் உபாதைகளை முன்னிட்டு விடுவிக்கக் கோரினர். ஆனால் அபராதத்துடன் தண்டனை விதித்த நீதிபதி, அதைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com