உஷார்... 3 சட்டக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை அனுமதி ரத்து!

சட்டப் பல்கலைக்கழகம்
சட்டப் பல்கலைக்கழகம்
Published on

தூத்துக்குடி மாவட்டம் துளசி மகளிர் சட்டக் கல்லூரி, தென்காசி மாவட்டம் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் முகில் சட்டக் கல்லூரி ஆகிய தனியார் சட்டக் கல்லூரிகள் மீது அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக இணைப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

“ தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக (சட்டக் கல்லூரிகளின் இணைப்பு மற்றும் ஒப்புதல்) ஒழுங்குமுறை விதிகள் சட்டக் கல்லூரிகள் சில நடைமுறைகளைத் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. மேலும், சட்டக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது இவ்விதிமுறைகள் (Regulations), அரசு ஆணை மற்றும் இந்திய வழக்குரைஞர் மன்றத்தின் (Bar Council of India) ஒப்புதல் ஆகியவற்றால் முறைப்படுத்தப்படுகிறது. மேற்கண்ட ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் பின்வரும் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு 2025-2026 -ஆம் கல்வியாண்டிற்கான தற்காலிக இணைப்பு வழங்கப்பட்டுள்ளது:

 (1)        துளசி மகளிர் சட்டக் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம்

(2)        எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி, தென்காசி மாவட்டம்

(3)        முகில் சட்டக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம்

இந்தத் தற்காலிக இணைப்பின் அடிப்படையில், கல்லூரிகள் இந்திய வழக்குரைஞர் மன்றத்தின் ஒப்புதலையும் பெற வேண்டியது அவசியமாகும்.  2025-2026 -ஆம் கல்வியாண்டிற்கான தற்காலிக இணைப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும், மேற்கண்ட கல்லூரிகளால் இந்திய வழக்குரைஞர் மன்றத்தின் ஒப்புதலைப் பெற முடியவில்லை. “தடையாணைக் காலம்” (Moratorium period) முடிவடைந்த பிறகு, இறுதியாக இந்திய வழக்குரைஞர் மன்றத்தால் ஏப்ரல் 2026-ல் மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்திய வழக்குரைஞர் மன்றத்தின் ஒப்புதல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் கல்லூரிகள் மாணவர்களைச் சேர்க்கக்கூடாது என்று பல்கலைக்கழக விதிமுறைகளும் தற்காலிக இணைப்பு நிபந்தனைகளும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்ட பின்னரே மாணவர் சேர்க்கை நடைபெற முடியும்.  மேலும், அரசு ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, மாணவர் சேர்க்கையானது அரசு ஆணையால் முறைப்படுத்தப்படுகிறது மற்றும் அது பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.  2025-2026-ஆம் கல்வியாண்டில் கூடுதல் இடங்களைப் பொறுத்தவரை மேற்கண்ட தனியார் சட்டக் கல்லூரிகள் இப்பல்கலைக்கழக கலந்தாய்வு செயல்முறையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மாணவர்களைச் சேர்த்துள்ளதாக அக்கல்லூரிகளின் முறையீடு விதிமுறைகளுக்கு முரணானதாகும்.

ஒழுங்குமுறை விதிகள் மற்றும் இந்திய வழக்குரைஞர் மன்றத்தின் உத்தரவு ஆகியவை தெளிவாக மீறப்பட்டுள்ளதால், பல்கலைக்கழக சிண்டிகேட் (Syndicate) தீர்மானத்தின்படி (1)   துளசி மகளிர் சட்டக் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம் (2) எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி, தென்காசி மாவட்டம் (3) முகில் சட்டக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் ஆகிய தனியார் சட்டக் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக இணைப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான தற்காலிக இணைப்பு நீட்டிப்பைக் கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் துளசி மகளிர் சட்டக் கல்லூரியால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பரிசீலிக்க வேண்டாம் என இப்பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு தீர்மானித்துள்ளது.

அக்கல்லூரிகளில் முந்தைய கல்வியாண்டுகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குத் தகுந்த தீர்வு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் (Syndicate) தீர்மானங்கள் வாயிலாக ஒரு குழுவை அமைப்பதன் மூலம், மாணவர்களின் நலனும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.” என்று சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com