தமிழ் நாடு
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில் காவிரிப் பாசனப் பகுதிகளில் கனத்த மழை பெய்துவருகிறது. இந்நிலையில் பெங்கல் புயலானது வரும் 30ஆம் தேதி பரங்கிப்பேட்டை, கடலூர்- சென்னைக்கு இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதையொட்டி சென்னை சுற்று வட்டாரத்தில் நாளைமறுநாள் 29ஆம் தேதியும் 30ஆம் தேதியும் கன மழை பெய்யும் என்றும் புயல் கரையைக் கடக்கும்போது சென்னைக்கு நல்ல மழைப் பொழிவு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்றும் நாளையும் சென்னையில் மிதமான மழை பெய்யும் என்றும் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
அதையடுத்து, புயல் கரையைக் கடந்தபின்னர் இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஒருவேளை மேற்குப் பகுதியிலும்கூட மழை பெய்யக்கூடும் என்றும் ஜான் கணித்துள்ளார்.