இரண்டு நாள்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினியில் இருந்ததால் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் சென்னை மத்திய ரயில்நிலையத்தில் சுருண்டு விழுந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மித்னாப்பூர் பகுதியிலிருந்து 11 விவசாயத் தொழிலாளர்கள் வேலைதேடி சென்னையை அடுத்த பொன்னேரிக்கு வந்தனர். ஆனால் மூன்று நாள்கள் பொன்னேரியில் தங்கி அலைந்தும் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் ஊர்திரும்ப முடிவுசெய்தனர்.
அதற்காக சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்துக்குச் சென்றனர். அந்தோ பரிதாபம் அவர்களின் கையில் சுத்தமாக ஒரு பைசாவும் இல்லாதநிலையில் இரண்டு நாள்கள் பட்டினி கிடந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டும் ஞாயிறு இரவு ஹௌரா மெயில் வண்டியில் மேற்குவங்கத்துக்குப் புறப்பட்டார்.
இந்நிலையில் அவர்களில் நான்கு பேர் திங்கள் காலை 9 மணியளவில் நான்காவது நடைமேடை பகுதியில் மயங்கி சுருண்டு விழுந்தனர். முதலில் அங்குள்ள தனியார் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் 50 வயதான மாணிக் கோரி என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மயங்கிவிழுந்த மற்ற மூவரான 33 வயது சத்யா, 35 வயது சமர்கான், அசிட் பண்டிட் ஆகியோரின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மற்ற ஏழு பேரையும் மாநகராட்சியின் வீடற்றோர் தங்குமிடத்தில் உணவு வழங்கி, பராமரிக்கப்படுகின்றனர் என்று சென்னை மாநகராட்சியின் சுகாதார அதிகாரி ஜெகதீசன் கூறியுள்ளார்.