நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள காட்டுப் பகுதியில் சொகுசு காரின் உள்ளே எரிந்த நிலையில் 4 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, போதை மருந்து புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புகார் வைக்கப்படுகிறது. இதைக் கண்டித்து அதிமுக இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்நிலையில், திருநெல்வேலி திசையன்விளை அருகே உள்ள காட்டுப் பகுதியில் எரிந்த காரில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே பெட்டைகுளம் பகுதியில் சாலை ஓரமாக எரிந்த நிலையில் ஒரு கார் இருந்துள்ளது. அந்த காரில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளதால் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது, காரில் இருந்து கருகிய நிலையில் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் அந்த கார் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது விபத்தா அல்லது கொலையா காரில் ஏதும் தொழில்நுட்ப கோளாறு இருந்ததா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.