ஐந்து கோடி கரும்பு விவசாயிகளை பாதிக்கும் சர்க்கரை கட்டுப்பாடு உத்தரவை நிறுத்திவைக்கக் கோரி ஒன்றிய உணவு- பொதுவிநியோகத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசிக்கு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் தொகுதி எம்.பி. சச்சிதானந்தம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடித விவரம்:
”தற்போது நடைமுறையில் உள்ள கரும்புக் கட்டுப்பாட்டு ஆணை -1966 சட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு பலனளிக்கும் சட்டப் பிரிவுகளை ஒவ்வொன்றாக ஒன்றிய அரசு நீக்கி வருகிறது. சர்க்கரை ஆலைகளுக்கு வரும் லாபத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் விலை தர வழிவகுத்த 5A பிரிவை ரத்து செய்தார்கள். மாநில அரசுகள் கரும்பு விவசாயிகள் நலன்களைப் பாதுகாத்திட State Advised Price அறிவித்து வழங்குவதற்கான இருந்த சட்டப்பிரிவை ரத்து செய்தார்கள்.
ஒன்றிய அரசு 8.5 சதவீதம் பிழி திறன் கரும்புக்கு விலை அறிவித்து வந்ததைப் படிப்படியாக உயர்த்தி தற்போது 10.25 recovery கரும்புக்கு விலை அறிவிக்கின்றனர் .
கரும்பு விவசாயிகளுக்கு பலனளித்த பல சட்டப் பிரிவுகளை ஒன்றிய அரசு ஏற்கனவே நீக்கிவிட்டனர்.
தற்போது கரும்புக் கட்டுப்பாட்டு ஆணை -2024ஐ ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்து சக்கரை ஆலைகள் மற்றும் மாநில அரசு சர்க்கரை துறைகளிடம் கருத்து கேட்டிருக்கிறார்கள். விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கரும்புக் கட்டுப்பாட்டு ஆணை -2024 சட்ட முன்மொழிவில் சக்கரை ஆலைகள் உற்பத்தி செய்திடும் சர்க்கரையை, எத்தனால் உட்பட உப பொருட்களை விற்க வேண்டுமானால் ஒன்றிய அரசின் அனுமதியை பெற வேண்டும் என்று உள்ளது. வங்கிகளில் அடகு வைத்த சர்க்கரையை சர்க்கரை ஆலைகள் எடுத்து விற்க வேண்டும் என்று சொன்னால் கூட ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் சட்ட முன்மொழிவில் உள்ளது.
இந்த சட்டம் வந்தால் கரும்பு விவசாயிகளுக்கு1966 ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ள உள்ளபடி விவசாயிகளுக்கு 14 நாள்களுக்குள் சர்க்கரை ஆலைகள் கரும்புக்கான பணத்தை வழங்கவேண்டும் என்பது ரத்து செய்யப்பட்டுவிடும்.
சர்க்கரை ஆலைகள் அவர்கள் விரும்புகிறபோது விவசாயிகளுக்கு கருப்புக்கான பணத்தை கொடுப்பதற்கு சட்டமே அனுமதிக்கிற நிலைமை ஏற்படும்.
இது நாடு முழுவதும் இருக்கிற ஐந்து கோடி கரும்பு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிற செயலாகும்.
இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு முறையில் மாநிலங்களுக்கு இருக்கிற உரிமைகளைப் பறித்து ஒன்றியத்தில் அதிகாரத்தைக் குவிக்கிற செயலாக இந்த சட்டம் அமைந்துவிடும். ஆகவே இந்த சட்டத்தை அமல்படுத்த கூடாது.
தற்போது ஒன்றிய அரசு சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்திடும் சர்க்கரையை விற்பனை செய்வதற்கு மாதா மாதம் இலக்கு நிர்ணயிக்கின்றனர். இதனால் சர்க்கரை ஆலைகள் உரிய காலத்தில் சர்க்கரையை விற்க முடியாமல் சிரமப்படுகின்றன. சர்க்கரை விற்பதற்கு இலக்கு தீர்மானித்திடும் முறையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
கரும்பு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு தீர்மானிக்க வேண்டும். அதுவரை முன்மொழியப்பட்டுள்ள சர்க்கரைக் கட்டுப்பாடு உத்தரவு-2024 ஐ ஒன்றிய அரசு அமுலாபடுத்திடக்கூடாது.” என்று மார்க்சிஸ்ட் எம்.பி. சச்சிதானந்தம் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.