கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள சின்ன காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாயக் கிணறு உள்ளது. இவர் டைல்ஸ் வியாபாரம் செய்துகொண்டு இருந்தார். நேற்று மாலை இவருக்குச் சொந்தமான கிணற்றில் 5 பேர் பிணமாகக் கிடந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் மிதந்த 5 பேரின் உடல்களை மீட்டனர். கிணற்றில் பிணமாகக் கிடந்தவர்கள் ராமசாமி(63), அவரது மனைவி ஜானகி(60), இவர்களின் மகள் சுகுணா(35), சுகுணாவின் மகள் சிவானி(10), மகன் ஆதிரன்(4) என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் சேலையால் உடல்களையும், கைகளையும் கட்டியிருந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக ராமசாமி, தனது சொந்த விவசாய கிணற்றில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
இராமசாமியின் மகள் சுகுணாவிற்கும், கார் டீலர் வேலைப் பார்த்துவரும் சுகுணாவின் கணவர் பிரபுவிற்கும் ஏற்பட்ட தகராறில், சுகுணா தனது தந்தை வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.