தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி.

டி.என்.பி.எஸ்.சி.-க்கு 5 உறுப்பினர்கள் நியமனம்- தேர்வு முடிவுகள் விரைவாகுமா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி.-க்கு ஐந்து உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

மொத்தம் 16 உறுப்பினர்கள் இருக்கவேண்டிய தேர்வாணையத்தில், எட்டு உறுப்பினர்களின் இடம் காலியாகவே இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த இடங்கள் நிரப்பப்படாமல் இருந்துவந்தது. இதனால்தான் பல போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருப்பதாக தேர்வு எழுதியவர்கள் தொடர்ந்து அதிருப்தியில் இருந்துவருகின்றனர். பல அரசியல் கட்சிகளும் இதுகுறித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், புதிதாக 5 பேரை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.பி. சிவனருள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி சரவணகுமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார், முனைவர் பிரேம்குமார் ஆகியோர் இப்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் முனைவர் அருள்மதி, பொருளாதாரப் பேராசிரியர் ஜோதி சிவஞானம், எம். ஆரோக்கியராஜ், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி முனியநாதன் ஆகியோர் வரிசையாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் முனியநாதன் பொறுப்புத் தலைவராகச் செயல்பட்டுவருகிறார்.

இன்னும் மூன்று உறுப்பினர் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், இந்த நியமனத்தால் நிலுவையில் உள்ள போட்டித் தேர்வு முடிவுகள் விரைவுபடுத்தப்படும் என காத்திருக்கும் போட்டியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com