தமிழ்நாட்டில் இதுவரை 922 தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டுள்ளன; இவற்றின் மூலம் 32.8 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரு வார வெளிநாட்டுப் பயணமாக சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முந்தைய பயணங்களின் பலன்கள் என பல தகவல்களைப் பட்டியலிட்டார்.
அவர் கூறியது:
”ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் இன்று என்னுடைய பயணத்தை மேற்கொள்கிறேன். செப்டம்பர் 8-ஆம் நாள் நான் தமிழ்நாட்டிற்கு திரும்பி வருகிறேன். இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
2021-இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவரைக்கும் 10 இலட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம். இதன்மூலமாக 32 இலட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவடைகின்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் ப்ரொடக்ஷனை ஸ்டார்ட் செய்துவிட்டார்கள். இந்த வளர்ச்சி வந்திருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு ஒன்றிய அரசு வெளியிடுகின்ற புள்ளி விவரங்களே ஆதாரமாக (proof) இருக்கிறது.
என்னுடைய ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும், தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாக, திறமையான இளைஞர்கள் இருக்கின்ற மாநிலமாக, வாய்ப்புகளை ஊக்குவிக்கின்ற மாநிலமாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் உயர்ந்திருக்கின்ற காரணத்தால், தரவுகளுடன் எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கின்றேன்.
இதுவரைக்கும், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளுக்கு நான் பயணத்தை மேற்கொண்டு,
· அமெரிக்க பயணத்தில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
· ஸ்பெயின் பயணத்தில் 3 புரிந்துணர்வு ஓப்பந்தங்கள்
· ஜப்பான் பயணத்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
· ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
· சிங்கப்பூரில் ஒரு ஒப்பந்தம் என்று 30 ஆயிரத்து 37 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யும் 36 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 18 ஆயிரத்து 498 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது.
இந்த 36 ஒப்பந்தங்களில், 23 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகதான் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் புறப்பட்டுச் செல்கிறேன்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.